சீனா, மார்ச் 28 – சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் நெதர்லாந்தில் நடந்த அணுபாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்சிற்கு சென்றுள்ளார். இவருக்கு பிரான்ஸ் அரசு சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
இதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெட் விமானங்கள் குறித்த விற்பனை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, நீண்டதூரப் பயணங்களுக்கான 27 ஏ330 விமானங்களும், 43 சிறிய ரக ஏ320 விமானங்களும் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்தால் சீனாவிற்கு வழங்கப்படயிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 10 பில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலராகும்.
மேலும் ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பிரிவு,1000-ம் பயண ஹெலிகாப்டர்களை, வரும் 20 வருடங்களுக்குள் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இதன் பயனாய் சீனாவும் தங்கள் நாட்டின் வடபகுதி நகரமான டியான்ஞ்சினில் வரும் 2015 ஆம் ஆண்டு வரை ஏர்பஸ் நிறுவனம் தங்களது விமான உற்பத்தியைத் தொடருவதற்கான அனுமதியை அளித்துள்ளது.
சீன அதிபரின், பிரான்ஸ் வருகையால் தற்போது போடப்பட்டுள்ள விமான விற்பனை ஒப்பந்தகளானது பிரான்சின் ஏற்றுமதியில் 29 சதவிகிதத்திற்குச் சமமானது. இதுதவிர இரு நாடுகளும் அணுசக்தி, நிதி, வாகன உற்பத்திப்பிரிவு உட்பட 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசியக்கண்டத்தில் அசைக்க முடியாத நாடாகி வரும் சீனாவுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று முக்கிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தங்களின் வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.