Home நாடு குழந்தைகள் துன்புறுத்தல் சட்டத்தில் சுவீடனில் மலேசியத் தம்பதிகளுக்கு சிறை

குழந்தைகள் துன்புறுத்தல் சட்டத்தில் சுவீடனில் மலேசியத் தம்பதிகளுக்கு சிறை

624
0
SHARE
Ad

Azizul Shalwati Swedenமார்ச் 29 – சுவீடனில் மலேசியாவின் சுற்றுலாத் துறை இயக்குநராக பணியாற்றி வரும் அசிசுல் ரஹீம் அவாலுடின் மற்றும் அவரது மனைவி ஷல்வாதி நோர்ஷால் தம்பதிகள் தங்களின் நான்கு குழந்தைகளை துன்புறுத்தியதாக சுவீடன் நாட்டு அரசாங்கம் அவர்களின் மேல் வழக்கு தொடர்ந்து அந்த விவகாரம் மலேசியர்களிடையே பிரபலமாகப் பேசப்பட்டது நினைவிருக்கலாம்.

#TamilSchoolmychoice

மலேசியா திரும்பிய சம்பந்தப்பட்ட அந்த நான்கு பிள்ளைகளை பிரதமர் நஜிப் கூட நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தற்போது அந்த வழக்கின் படி, சுவீடன் நாட்டு சோல்னா வட்டார நீதிமன்றம் அந்த மலேசியத் தம்பதிகள் குற்றம் இழைத்திருக்கின்றார்கள் எனத் தீர்ப்பளித்து சிறைத்தண்டனை விதித்திருக்கின்றது.

மேலும் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.

பிள்ளைகளை அடித்தது, துன்புறுத்தியது, மன உளைச்சலுக்கு ஆளாக்கியது ஆகிய காரணங்களுக்காக கணவரான அசிசுல் பத்து மாத சிறைத் தண்டனையை பெற்றுள்ளார். மனைவியான ஷல்வாதிக்கு 14 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 46 வயதான ஷல்வாதி தங்களின் பிள்ளைகளுக்கு சுமார் 33,900 ரிங்கிட் நஷ்ட ஈடும், 38 வயதான அசிசுல் 18,362 ரிங்கிட் நஷ்ட ஈடும் தனித் தனியாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ரோத்தான் என்ற கம்பைக் கொண்டு அடித்ததையும், தொடர்ந்து குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளதையும் தான் கடுமையாக கருதுவதாக நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தம்பதியர் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என அவர்களின் வழக்கறிஞர் கிறிஸ்தோபர் ஸ்டாரே கூறியுள்ளார்.

அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில் நன்னடைத்தைக்காக மூன்றில் ஒரு பகுதி குறைக்கப்படும் என்றும் ஏற்கனவே அவர்கள் சிறையில் இருந்து வருகின்றார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அடுத்த 6 மாத காலத்தில் ஷல்வாதியும், அடுத்த 4 மாத காலத்தில் அசிசுலும் விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் குற்றங்களுக்காக இந்த தம்பதியர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அந்த நான்கு பிள்ளைகளும் ஏற்கனவே மலேசியா திரும்பி, கிளந்தானில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றார்கள்.