இலங்கை, மார்ச் 31 – இலங்கையில் நடைபெற்று முடிந்த மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
எனினும் 2009-ஆம் ஆண்டு நடந்த தேர்தலைக் காட்டிலும், இம்முறை குறைந்த உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. இதுகுறித்து அரசியல் ஆய்வாலர்கள் கூறியதாவது,
2009-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது, 12 தொகுதிகள் குறைவாகப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியும் இரண்டு தொகுதிகள் குறைவாகப் பெற்றுள்ளது.
ஆனால் ஜேவிபி உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயர்ந்துள்ளது. தனித்து போட்டியிட்ட அரசாங்கத்தின் சகோதரக் கட்சிகளான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.
அதிபர் மகிந்த ராஜபக்சே மாவட்டமான காலி, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபையிலும் ஆளும் கட்சி சரிவு ஏற்பட்டுள்ளது.
இது மகிந்த ராஜபக்சேவின் செல்வாக்கு சரிந்து வருவதை காட்டுகின்றது” எனக் கூறியுள்ளனர். முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தியாக வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.