சென்னை, மார்ச் 31 – தமிழ் சினிமா நாயகர்களைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், சரத்குமார் உள்பட பல நடிகர்கள் பின்னர் நாயகனாகியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதன்பிறகு மற்ற கதாநாயகர்கள் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை.
அப்படியே அழைப்பு வந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. ரஜினியைக் கொண்டு ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் கூட முன்னாள் வில்லன் நடிகர் ஒருவரை மீண்டும் ரஜினியுடன் வில்லன் வேடத்தில் நடிக்க சொன்னதற்கு மறுத்து விட்டார்.
அதன் பிறகுதான் சுமன் அப்படத்தில் வில்லனாக நடித்தார். இந்த நிலையில், மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்பவர் மோகன்லால். இப்போதும் தனக்கான இடத்தை தக்க வைத்து வருகிறார்.
அவர் நடித்த த்ரிஷ்யம் படம் தற்போது 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்திருக்கிறது. இருப்பினும், வில்லன் வேடங்களை அவர் தவிர்க்கவில்லை. கதையும், தனக்கு தரப்படும் கதாபாத்திரமும் பிடித்து விட்டால், புதுமுக நாயகர்களின் படமாக இருந்தாலும் வில்லன் வேடங்களில் நடித்து வரும் மோகன்லால்,
தற்போது பரத் மலையாளத்தில் நடித்து வரும் கூதறா என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். நான் பெரிய கதாநாயகந் இந்த மாதிரி வில்லனாகத்தான் நடிப்பேன் என்று எந்த சட்டமும் பேசாமல் கதைக்குத் தேவையான வில்லனாகவே தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் மோகன்லால்.