கோலாலம்பூர் – ‘காதல் செய்ய விரும்பு’, ‘திரு ரங்கா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி பார்கவன், நடிகர் பரத்தை வைத்து இயக்கியிருக்கும் புதிய படம், ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’.
நடிகர் பரத்துடன், அங்கனா ராய், ருஹானி ஷர்மா, ரவி மரியா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஷங்கர் படத்தில் அறிமுகமான நடிகர் பரத் போன்ற திறமையான நடிகருக்கு, சில படங்கள் நன்றாகக் கைகொடுத்து அவரது திறமையை வெளிக் கொண்டு வந்தாலும் கூட, இடையிடையே வரும் பல படங்கள் அவரது மார்க்கெட்டை காலி செய்யும் வகையில் அமைந்துவிடுகின்றன.
அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது இந்த ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ திரைப்படமும்.
மொக்கையான கதை, போரடிக்கும் திரைக்கதை, பரத், ரவி மரியாவைத் தவிர படத்தில் யாருக்குமே உதடு அசைவு துளி கூட ஒட்டாத வகையில் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட வசனங்கள், அந்த வசனங்களிலும் சிறுபிள்ளைத்தனமான கருத்துகள், இரட்டை அர்த்த வசனங்கள் என பரத்தின் மார்க்கெட்டை காலி செய்து, கதாநாயகன் போட்டியில் கடைசி பெஞ்சுக்குத் தள்ளியிருக்கிறது இத்திரைப்படம்.
‘கடுகு’, ‘ஸ்பைடர்’ என அண்மையப் படங்களில் சிறு வேடங்களில் வந்தாலும் கூட அதில் நல்ல பெயர் எடுத்து வரும் பரத், இது போன்ற படங்களைத் தவிர்ப்பது நல்லது.
படத்தில் முதல் பாதி முழுக்க, கல்லூரியைச் சுற்றி வருகிறது கதை. பெண்களை கேலி செய்வது, ஆபாசமாகப் பேசுவது என அலைகிறது ஒரு கும்பல். அவர்களுக்கு ரவி மரியா லவ் குருவாக ‘வேலை’ செய்கிறார்.
அந்தக் கல்லூரிக்கு புதிதாக வருகிறார் கார்த்தி (பரத்), பெண்களைப் பற்றி பல தத்துவங்களை உதிர்க்கிறார். பெண்களுக்கு கை கூட கொடுக்கமாட்டேன் என்கிறார். ஆனால் காதலுக்கு முன் கலவி செய்வது தான் ஆண்களுக்கு நல்லது என்று நண்பர்களுக்கு யோசனை சொல்கிறார். இப்படி ஒரு புரியாத புதிராகவே வரும் பரத், ஏன் அவ்வாறு செய்கிறார் என்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, காதலன் கேட்கிறார் என்பதற்காக அவனுடன் படுக்கையைப் பகிரும் பெண், ஆடம்பரச் செலவுகளுக்காக விலை மாதுவாய் மாறும் கல்லூரி மாணவி என நாம் தினமும் நாளிதழ்களில் படிக்கும் சமாச்சாரங்களும் இப்படத்தில் இருக்கின்றன.
அதற்காக படம் முழுவதும் பரத்தை வைத்து காதல் அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி இயக்குநர் சார்?
படத்தில் ஒரு காட்சி வருகின்றது. கதாநாயகி ருஹானி ஷர்மா, தனக்குத் தெரிந்த ஆண்களையெல்லாம் வீட்டு அழைக்கிறார். அவர்கள் அனைவரும் வரிசைக் கட்டி வாசலில் நிற்க ஒவ்வொருவரையாய் வீட்டுக்குள் அழைத்துக் கதவைச் சாத்துகிறார். ஒவ்வொருவரும் ‘ஆசைப்பட்டு’ உள்ளே போக அங்கு இரண்டு தாதிகளை வைத்து அவர்களிடம் இருந்து இரத்த தானம் பெறுகின்றார்.
ஏமாந்து போன அனைவரும், ‘என்னங்க இப்படிப் பண்ணீட்டீங்க?’ என்று கேட்க, ‘இரத்த தானம் செய்யுங்க நல்லது. அட்லீஸ்ட் மாசத்துல ஒன்னு ரெண்டு தடவையாவது செய்யுங்க’ என்கிறார்.
“என்னது மாசத்துல ஒன்னு ரெண்டு தடவையா?” – எப்படி முடியும் இயக்குநரே? ஒரு முறை இரத்த தானம் கொடுத்துவிட்டால் குறைந்தது 90 நாட்கள் இடைவெளி வேண்டுமே?
அடுத்ததாக, கல்லூரி மாணவி ஒருவர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விலை மாதராகிறார். அவரைத் தடுத்துக் கண்டிக்கும் பரத், “உன் ஒடம்பு கல்யாணம் ஆகுற வரைக்கும் அப்பா, அம்மாவுக்குச் சொந்தம், கல்யாணம் ஆன பின்பு அது புருஷனுக்குச் சொந்தம்” என்று அறிவுரை கூறுகிறார்.
“அது என்ன பட்டா நிலமா? ஆளாளுக்குச் சொந்தம் கொண்டாடுறதுக்கு?”..
இப்படியாக படம் முழுவதும் ரசிக்கும் படியான ஒரு அழுத்தமான கதையோ, திரைக்கதையோ, வசனமோ இல்லாமல், 2000-ம் ஆண்டு வெளிவந்த சில சுமார் படங்களின் சாயலில் இருக்கிறது. இப்போது யுடியூப்பில் வரும் குறும்படங்கள் கூட, முழு நீளத் திரைப்படங்கள் அளவிற்கு தரமாக வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முனீர் மாலிக்கின் ஒளிப்பதிவும், காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களும் சுமார். அதேவேளையில், அன்பு ராஜேசின் பின்னணி இசையும், பாடல்களும் மிகவும் சுமார் இரகம்.
-ஃபீனிக்ஸ்தாசன்