ஏப்ரல் 1 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் தற்போதைய தயாரிப்பான ‘விண்டோஸ் போன் 8.1’ (Windows Phone 8.1) ஐ எதிர் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி, அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் சக போட்டியாளர்களை சமாளிக்கவும், திறன்பேசிகளின் தயாரிப்பில் அழுத்தமாக கால்பதிக்கவும் விண்டோஸ் போன் 8.1 -ஐ பல சிறப்பான அம்சங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியதாக தயாரித்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்த விண்டோஸ் போன் 8.1 – ல் குறிப்பிடப்படும் அம்சங்களாக கருதப்படுவது, “விண்டோஸ் போன் 8 ஐ விட, விண்டோஸ் போன் 8.1 ல் இயங்குதளம் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும். அதுமட்டுமல்லாது ஆப்பிளின் ஐஒஸ் ல் உள்ள ‘siri’ வசதியைக் காட்டிலும், இதில் உருவாக்கப்பட்டுள்ள ‘Cortana voice assistant’ வசதி சிறப்புமிக்கதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும் இதில் உருவாக்கப்பட்டுள்ள கேமராவிற்கான செயலி, உள்ளமைக்கப்பட்ட VPN வசதி மற்றும் Internet Explorer 11 ஆகியவை வாடிக்கையாளருக்கு வியப்பளிக்கும் விதமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ‘விண்டோஸ் போன் 8.1’ ஐ வெளியிடும் இதே தருணத்தில், நோக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ‘லூமியா 630′(Lumia 630) மற்றும் ‘லூமியா 930’ (Lumia 930) வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.