ஏப்ரல் 10 – அமெரிக்க அரசு தைவானுக்கு நான்கு இரண்டாம் தர போர்க் கப்பல்களை அளிப்பதாக ஒத்துக் கொண்ட ஒப்பந்தத்திற்கு சீனா பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 1949 – ல் சீனாவில் நிலவி வந்த ஷியாங்கே ஷேக் தலைமையிலான குவாமின்டாங் கட்சியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக மா சே துங் நடத்திய புரட்சியின் போது, ஷேக் உட்பட அக்கட்சியின் பெரும்பான்மையோர் தைவானில் தஞ்சம் அடைந்தனர்.
ஷேக், தைவானில் தனது ஆட்சியை உருவாக்கினார். அமெரிக்கா அதற்கு ஆதரவு தெரிவித்தது. அது முதல் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவிடம் இருந்து முழுமையாக விடுபடத் துடிக்கும் தைவான், அமெரிக்காவுடன் சில இராணுவ ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சகம், “அமெரிக்கா, தைவானுடனான இராணுவ ஒப்பந்தம் குறித்து ஏற்கனவே பல முறை சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும், அதனை அமெரிக்க அரசு பொருட்படுத்தாமல் இருந்து வருகிறது. இதன் விளைவாக சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் உறவுமுறைகள் பெரிதும் பாதிக்கப்படும்” என்று கூறியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சக் ஹெகல் சுற்றுப் பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த கருத்துகள் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.