Home இந்தியா நாளை சென்னையில் ரஜினிகாந்துடன் நரேந்திர மோடி சந்திப்பு

நாளை சென்னையில் ரஜினிகாந்துடன் நரேந்திர மோடி சந்திப்பு

687
0
SHARE
Ad

Rajni 440 x 215சென்னை, ஏப்ரல் 12: தமிழ் நாட்டு அரசியலைப் பொறுத்தவரை எத்தனை வேட்பாளர்கள் தேர்தலில் நின்றாலும், எத்தனை தலைவர்கள் தமிழ் மண்ணை சுற்றிச் சுற்றி வந்து பிரச்சாரம் செய்தாலும், நடிகர் ரஜினிகாந்த் என்ன சொல்கின்றார், யாரை ஆதரிக்கப் போகின்றார் என்பது குறித்துத்தான் தமிழக பத்திரிக்கைகள் வரி வரியாக எழுதித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நாளை சென்னை வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசுவார் என்று தமிழ் நாட்டு பாஜக இன்று அறிவித்துள்ளது, தமிழக அரசியலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

இதுவரை பல அரசியல் தலைவர்கள் ரஜனியைச் சந்தித்து தங்களுக்கும் அவருக்கும் இருக்கும் அரசியல் நட்பை பகிரங்கமாக்கி அதன் மூலம் தங்களின் வெற்றி வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும், ரஜினியின் ஆதரவைப் பெறுவதில் பல்வேறு கட்சிகளும் போட்டி போடுகின்றன. எனினும் இந்த முறை ரஜினியும் வழக்கம்போல் ஓடி ஒளியாமல் தன்னை சந்திக்க வரும் அனைவரையும்  அன்போடு அரவணைத்து சந்திக்கின்றார்.

ஆனால் யாருக்கும் ஆதரவு என்று ரஜினி இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

அதிமுகவும் திமுகவும் ரஜினியை இந்த விஷயத்தில் பெரிய அரசியல் சக்தியாக காட்ட விரும்புவதில்லை. ஆனால், பாஜகவும் காங்கிரசும் நேரடியாக ரஜினியை தங்கள் நெருங்கிய நண்பராகக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக உள்ளனர்.

குறிப்பாக நரேந்திர மோடி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ரஜினியைச் சந்திக்கத் தவறுவதில்லை.தமிழக பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் போன்றவர்கள், ஒவ்வொரு பேட்டியிலும் ரஜினியின் ஆதரவு எங்களுக்கே என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். அப்போது ரஜினியைச் சந்தித்துப் பேசுகிறார். இதனை தமிழக பாஜகவும் உறுதி செய்துள்ளது.

ஆனால், ரஜினி நாளை பகிரங்கமாக மோடிக்கும் பாஜகவுக்கும் ஆதரவு தெரிவித்து வாய் திறப்பாரா? அல்லது வழக்கம் போல் நழுவி விடுவாரா?

…..தமிழகம் காத்திருக்கின்றது!