ஏப்ரல் 14 – உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறைக் கட்டிடங்களை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று சனிக்கிழமை கைப்பற்றிக்கொண்டது. மேலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சர் ஆர்சென் அவாகோவ், தம் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு குழுவினர் இராணுவ சீருடையில் வந்து டொனெட்ஸ்க்கில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்லாவ்யான்ஸ்க் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மரணமடைந்தார். இதன்பின், ஆயுதங்களுடன் வந்த மற்றொரு கும்பல் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் அரசு அலுவலகத்தைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது.
அச்சம்பவ இடத்திற்கு உக்ரைனின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terrorist Squad ) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க் நகரில் அரசு அலுவலகங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
மேலும், தன்னிச்சையாக பாதுகாப்பு அமைச்சராக அறிவித்துக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டினால் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.
கிரிமியாவிற்கு ஏற்பட்ட நிலை, உக்ரைனின் கிழக்குப் பகுதிகளுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. உக்ரைனில் பிரிவினைவாத கோரிக்கைகளும், போராட்டங்களும் மிகத் தீவிரமடைந்து வருவதால் நாட்டோ (NATO) படைகளின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என முன்னாள் சோவியத் நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான பனிப்போர் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.