ஏப்ரல் 15 – எல்லாப் போராட்டங்களிலும் வெற்றி பெற்று வந்த பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் வாட்டர்லூ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் தோல்வியுற்றான் என்பது வரலாறு.
அதனால் இன்றைக்கும் ஆங்கிலத்தில் நின்று நிலவும் ஒரு பழமொழி “he meets his waterloo” – அவன் தனது வாட்டர்லூவை சந்தித்தான் – அதாவது இறுதியாக ஒருவன் தன்னைத் தோற்கடிக்கப் போகும் போர்க்களத்திற்கு வந்துவிட்டான் என்பதுதான் அதன் அர்த்தம்.
அந்தப் பழமொழிக்கேற்ப, மோடியின் வாட்டர்லூ களமாக வாரணாசி அமைந்து விடுமோ என்ற அச்சத்தை பாஜகவினரிடையே ஏற்படுத்தி அதன்மூலம் நாடு முழுவதும் – ஏன் அகில உலகமுமே கவனிக்கும் வேட்பாளராக – வாரணாசியில் மோடிக்கு எதிராகப் போட்டியிடுபவர் அர்விந்த் கெஜ்ரிவால் (படம்).
நாடு முழுவதும் வீசுகின்ற மோடி அலை – முழங்கப்படும் மோடி அரசாங்கம் என்ற சுலோகம் – அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதி – இப்படியாக எல்லாவகையிலும் முன்னணியில் வெற்றிப் பாதையில் நிற்கின்ற நரேந்திர மோடியே பார்த்து உள்ளுக்குள் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபர், அர்விந்த் கெஜ்ரிவால்.
மோடியின் இந்துத்துவா கொள்கையின் பிரதிபலிப்பாக கருதப்படும் வாரணாசி என்ற காசி தொகுதியில் – இந்துக்களின் புராதன புனித நகர் என்று போற்றப்படும் பகுதியில் வெகு சுலபமாக வென்று விடுவார் என அனைவரும் நரேந்திர மோடியைக் கருதியிருந்த வேளையில், அவருக்கே சிம்ம சொப்பனமாக அங்கு வந்து அவருக்குப் போட்டியாக களத்தில் குதித்திருப்பவர் அர்விந்த் கெஜ்ரிவால்.
முன்னாள் டில்லி முதலமைச்சர்…
ஊழலுக்கு எதிராகப் போராடிய அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு முன்னணிக்கு வந்த முன்னாள் அரசாங்க அதிகாரியான அர்விந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தோற்றுவித்து குறுகிய காலத்திலேயே டில்லியில் கணிசமான சட்டமன்றங்களைக் கைப்பற்றியவர்.
காங்கிரஸ், பாஜக இரண்டில் யார் ஆட்சி அமைக்க வேண்டியிருந்தாலும் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு இல்லாமல் முடியாது என்ற இக்கட்டான அரசியல் சிக்கலை ஏற்படுத்தியவர் கெஜ்ரிவால்.
காங்கிரசின் ஆதரவால் டில்லியின் முதல்வராக பதவியேற்று, “முதல்வன்” தமிழ்ப்பட பாணியில் ஊழலுக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அகில இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து தனது அதிரடி முடிவுகளால், முதலமைச்சர் பதவியையும் டில்லி மாநிலத்தின் ஆட்சியையும் 50 நாட்களிலேயே இழந்தவர்.
இன்றைக்கு கூட, இந்தியத் தொலைக்காட்சிகளில் அதிகமாகப் பேசப்படுபவர்களில் ஒருவரும் அவர்தான்.
மோடி, ராகுலுக்கு அடுத்த நிலையில் அதிகமாக மக்களை ஈர்த்து அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய சக்தியாக விளங்குகின்றார் கெஜ்ரிவால்.
மோடியுடன் மோதல் ஏன்?
ஆனால், ஏனோ எப்போதும் பாஜகவுடனும், நரேந்திர மோடியுடனும் எப்போதும் பகைமை பாராட்டும் கெஜ்ரிவால், மோடியைத் தோற்கடித்துக் காட்டுகின்றேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு சவால் விட்டு, வாரணாசி தொகுதியில் போட்டியிடுகின்றார்.
இதன் மூலம் மற்றொரு சிறந்த அரசியல் வியூகத்தையும் செயல்படுத்தியுள்ளார் கெஜ்ரிவால்.
காங்கிரஸ் செத்த பாம்பாகி விட்ட நிலையில், இனி அடுத்த அரசியல் உச்ச நட்சத்திரம் மோடிதான் என்பதால் அவரை எதிர்த்து காய்களை நகர்த்துவதன் மூலம் – அவரோடு நேரடியாக மோதுவதன் மூலம் – அகில இந்தியாவும் கவனிக்கப்போகும் வேட்பாளராக ஒரே நொடியில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார் கெஜ்ரிவால்.
இதனால், மோடியும் கொஞ்சம் ஆடிப் போய்விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
அதனால்தானோ என்னவோ, தனது சொந்த குஜராத் மாநிலத்தில், தனது பாரம்பரிய பிறந்த ஊரைக் கொண்ட தொகுதியான வடோடோரா என்ற பரோடா நகரை உள்ளடக்கிய தொகுதியிலும் நாடாளுமன்ற வேட்பாளராக மோடி போட்டியிடுகின்றார்.
வாரணாசி குஜராத் மாநிலத்திற்கு வெளியே உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
வாரணாசியில் தோற்றாலும் மோடி வடோடோராவில் வென்று விடுவார் – அதனால் எப்படிப் பார்த்தாலும் அவருக்குப் பாதகமில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.
ஆனால், மோடியை மட்டும் கெஜ்ரிவால் தோற்கடித்து விட்டால், அதன் மூலம் மிகப் பெரிய அரசியல் பலத்தையும், அடுத்த பிரதமர் வேட்பாளராகப் பார்க்கப்படும் தோற்றத்தையும் கெஜ்ரிவால் பெற்றுவிடுவார்.
சொற்ப வாக்குகளில் மோடியுடன் தோற்றால் கூட அது கெஜ்ரிவாலுக்கு வெற்றிதான்! மோடியின் வாக்குகளைக் குறைத்தவர் என்ற பெருமையோடு அடுத்த ஐந்தாண்டுகள் அரசியல் களத்தில், புகழோடு வலம் வருவார் கெஜ்ரிவால்.
-இரா.முத்தரசன்