இஸ்தான்புல், ஏப்ரல் 15 – துருக்கியில் ‘டுவிட்டர்’ (Twitter) உட்பட நட்பு ஊடகங்களில், அந்நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் சிலர் அம்பலப்படுத்தினர்.
இதனை தடுக்கும் விதமாக, அந்நாட்டின் பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன் தடை உத்தரவை பிறப்பித்தார். இதனை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த டுவிட்டர் நிறுவனம், கடந்த 3-ஆம் தேதி தடையை நீக்கும் உத்தரவில் வெற்றி கண்டது.
நீதிமன்றத்தின் உத்தரவை அரைமனதுடன் ஏற்றுக்கொண்ட அந்நாட்டு அரசு, தற்போது டுவிட்டர் மீது, வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டை தொடுத்துள்ளது. மேலும் அலுவலக ரீதியான பேச்சுவார்த்தைகளுக்காக நிர்வாகிகளைக் கொண்ட அலுவலகம் ஒன்றை துருக்கியில் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்நாட்டுப் பிரதமர் எர்டோகன் கூறியதாவது,
“டுவிட்டர், யு-டியூப், பேஸ்புக் போன்ற ஊடகங்கள் இலாபத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டன. அதனால் அந்நிறுவனங்கள் மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் போன்று, துருக்கியின் அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் வரி விதிகளுக்கு இணைந்து செயல்படவேண்டும்” என்று கூறியுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்திற்கு, வரி செலுத்துதல் தொடர்பான விதிகள் மட்டும் இல்லாது, தேவைப்படுகின்ற பொழுது சர்ச்சைக்குரிய பக்கங்களை நீக்குதல் மற்றும் அத்தகைய பக்கங்களின் ‘ஐபி முகவரிகள்’ (IP Address) ஐ வழங்குதல் உட்பட பல்வேறு நிபந்தனைகளைப் பிரதமர் எர்டோகன் விதித்துள்ளார். துருக்கி அரசின் இந்த அதிரடி நிபந்தனைகள் குறித்து டுவிட்டர் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.