சென்னை, ஏப்ரல் 16 – தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 24-ஆம் தேதி நடக்கிறது. 22-ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
பிரச்சாரம் முடிய 6 நாட்களே உள்ள நிலையில், தலைவர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியோர் நாளை ஒரே நாளில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கின்றனர்.
கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 39 காங்கிரஸ் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி சோனியாகாந்தி பேசுகிறார்.
சேலம், கிருஷ்ணகிரியில் நடைபெறும் பாஜக கூட்டங்களில் மோடி பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார். இரு தலைவர்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய தலைவர்களில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மட்டுமே 3 முறை தமிழகம் வந்து பிரச்சாரம் செய்திருந்தார். காங்கிரசில் மூத்த தலைவர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கன்னியாகுமரி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் வருகிறார் சோனியா காந்தி.
பின்பு கார் மூலம் கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். காலை 11.30 மணிக்கு அவர் உரையாற்றுகிறார்.