Home உலகம் நைஜீரியாவில் 200 பள்ளி மாணவிகளை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்!

நைஜீரியாவில் 200 பள்ளி மாணவிகளை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்!

795
0
SHARE
Ad

Tamil-Daily-News_2750360966மைடுகுரி, ஏப்ரல் 16 – மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள அம்ச்சக்கா மற்றும் சுற்றுப்புற கிராங்களுக்குள் நேற்று முன்தினம்  கும்பலாக புகுந்த போகோ ஹரம் தீவிரவாதிகள், அங்கிருந்த வீடுகளின் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசி ஆவேச தாக்குதல் நடத்தினர்.

#TamilSchoolmychoice

உயிர் பயத்தில் வீடுகளுக்குள் இருந்து வீதிக்கு ஓடி வந்த அப்பாவி மக்களின் மீது அந்த கொடியவர்கள் கண்மூடித் தனமாக துப்பாக்கிகளால் சுட்டதில் 70-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பலியாகினர்.

இந்நிலையில், போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு நேற்றிரவு வேன், லாரி மற்றும் பேருந்துகளில் வந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள், காவலர்களூடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி கடத்திச் சென்றனர். போகும் வழியில் இருந்த வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட உள்ளூர் ராணுவ அதிகாரிகள், ‘விரைவில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிடும்’ என்று தெரிவித்தனர்.

மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை தீவிரமாக எதிர்த்து வரும் போக்கோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். கடந்த மாதம் ஒரு பள்ளியின் விடுதிக்குள் புகுந்து மாணவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

மாணவிகளை கடத்தப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர். அரசு போதுமான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த கடத்தல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று சிபோக் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கடத்திச் செல்லப்பட்ட தங்கள் மகள்களின் கதி இந்நேரம் என்னவாயிற்றோ..? என்று பல பெற்றோர்கள் கண்ணீருடன் கதறிக் கொண்டிருக்கின்றனர்.