கோலாலம்பூர்: உள்ளூர் தனியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் நைஜீரிய மாணவர் ஒருவர் கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலில் இருந்த போது இறந்துள்ளதாக குடிநுழைவுத் துறை தலைவர் கைருல் சைமி டாயுட் உறுதிபடுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து இங்குள்ள மற்ற நைஜீரிய மாணவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அனைவரின் பார்வைக்கு கொண்டு வந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையின் வாயிலாக இது குறித்து கருத்துரைத்த கைருல், கடந்த ஜூலை 4-ஆம் தேதி இரவு, கெப்போங்கில் உள்ள அமான் பூரி அடுக்குமாடி இருப்பிடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
அக்குடியிருப்பு பகுதியில் உள்ள பல கடைகளில் ஆப்பிரிக்கர்கள் குழு நிரம்பி இருப்பதாக மக்கள் புகார் அளித்ததன் பேரில் அந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் தப்பித்து செல்ல முற்பட்டு, செயல்பாட்டு அதிகாரிகளின் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் கூறினார்.
இறந்ததாகக் கூறப்படும் அந்த நபர் புக்கிட் ஜாலீல் குடிநுழைவு டிப்போவில் 20 பேருடன் கைது செய்யப்பட்டார். ஜூலை 9-ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணியளவில், அவருக்கு வலிப்புத் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, உடனடி பரிசோதனை மற்றும் சிகிச்சை தருவதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவினர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையைத் தொடர்புக் கொண்டதாக அவர் கூறினார்.
“தற்போது, குடிநுழைவு இந்த விவகாரம் குறித்த முழு அறிக்கையையும், மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க முழு பிரேத பரிசோதனை அறிக்கைக்காகவும் காத்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, லிம் கோக் விங் பல்கலைக்கழகம் தனது மாணவர்களில் ஒருவரின் மரணமடைந்து விட்டதாக டுவிட்டர் மூலம் அறிவித்திருந்தது.