சென்னை, ஏப்ரல் 16 – கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதாவை தொடர்ந்து ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். ஆனாலும் ராமர் கோயில், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் ஜெயலலிதா தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில் ஜெயலலிதாவின் முதன்மை ஆலோசகராக கருதப்படும் சோ ராமசாமி தமது துக்ளக் (23.4.2014) பத்திரிகையில் இதுபற்றி கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரதிய ஜனதாவை என்னதான் விமர்சித்தாலும் அது சம்பிரதாயமான எதிர்ப்பாகத்தான் இருக்கும் என்று துக்ளக் ஆசிரியர் ‘சோ’ ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக தனித்து போட்டியிடுகின்றது. அந்த தனித்து போட்டியிடுதலை பாஜகவிற்கு எதிரானதாக எடுத்துக்கொள்ள முடியாது. பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை? ரகசிய உறவுதானே காரணம்?
என்று காங்கிரஸும், திமுகவும் தினமும் பிரச்சாரம் செய்தும் கூட, பல கூட்டங்களில் பேசிவிட்ட தமிழக முதல்வர், இதுவரை பாஜகவை எதிர்த்து எதுவுமே கூறவில்லை.
ஆனால் கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதாவை தொடர்ந்து ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். இனியும் கூட, தேர்தல் பிரச்சாரங்களில் சூடு ஏற,ஏற, அவர் பாஜகவை பற்றி ஏதாவது குறை கூறினாலும்,
அது சம்பிரதாய எதிர்ப்பாகத்தான் இருக்குமே தவிர, ‘மதவெறி’ என்ற அபத்தமாக இருக்காது என்று எதிர்ப்பார்க்கலாம் என கூறியுள்ளார் சோ.
அதிமுகவுக்கு அல்லது பாஜகவுக்கு ஓட்டு போடுங்க. பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அண்ணா திமுகவுக்கு மட்டுமே ஓட்டுப் போடுங்கள் என்று தனது பத்திரிகையில் கூறியிருந்தார். இதனால் பாஜக கூட்டணியில் உள்ள வைகோ, விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திடுக்கிட்டுப் போயுள்ளனராம்.
பாஜக கூட்டணியை ஆதரிக்கிற நபர் கூட்டணியில் இருக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்லாமல் அதிமுகவுக்கு ஓட்டுப் போடச் சொல்வது என்னவகை நியாயம்? என்று கண்கள் சிவக்க கொந்தளித்துக் கொண்டுள்ளனர். இந்த நாரதர் கலகம் எங்கு முடியுமோ?