ஏப்ரல் 20 – மறுநாள் காலை ஒரு வழக்குக்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக வியாழக்கிழமை இரவே பினாங்கு திரும்ப வேண்டுமென தனது தந்தை வற்புறுத்தினார் என அவரது 41 வயது மகனும், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ (படம்) தெரிவித்தார்.
அண்மையில் தனது தந்தை பந்தாய் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைத் தான் சந்தித்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் தன்னிடம் பல விஷயங்கள் குறித்து அளவளாவினார் என்றும் கோபிந்த் சிங் “ஸ்டார்” பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் நினைவு கூர்ந்தார்.
“உன்னை மீண்டும் பினாங்கில் சந்திக்கின்றேன்” என்பதுதான் அவர் தன்னிடம் கூறிய கடைசி வார்த்தைகள் என்றும் கோபிந்த் சிங் கூறியுள்ளார்.
“எங்களுக்காக வீட்டிலும் அவர்தான் வழக்கறிஞர்”
“வீட்டில் பிள்ளைகள் எங்களுக்கும் எங்கள் தாயாருக்கும் பிரச்சனை வந்தால் அவர் எங்கள் பக்கம்தான் வாதாடுவார். அந்த வகையில் பிள்ளைகளாகிய எங்களுக்கும் அவர்தான் வீட்டில் வழக்கறிஞர். அவர் ஒரு சிறந்த தந்தை” என்றும் கோபிந்த் சிங், மலாய் மெயில் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் கண்ணீரோடு தெரிவித்திருக்கின்றார்.
“தனது கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இறுதிவரை வாழ்ந்த எங்களின் தந்தை எங்களுக்கும் அதையேதான் போதித்தார். எங்களின் கொள்கைகளை என்றைக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அடிக்கடி எங்களுக்கு கூறினார்” என்றும் கோபிந்த் சிங் சோகத்துடன் கூறினார்.
“எப்போதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் நேரடியாக எனது தந்தை தனது கருத்துக்களை கூறிவிடுவார். முதலில் பலருக்கு இது பிடிக்கவில்லை என்றாலும், காலப்போக்கில் அவரது நேரிடையானப் போக்கை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்” என்றும் கோபிந்த் சிங் கூறினார்.
41 வயதான கோபிந்த் சிங் கர்ப்பாலின் இரண்டாவது மகனாவார். தற்போது இரண்டாவது தவணையாக ஜசெக சார்பில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகின்றார்.
(பின்குறிப்பு : மறைந்த கர்ப்பால் சிங், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரது மனங்களிலும் பல்வேறு காரணங்களால் இடம் பிடித்தவர். அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியுள்ள விவரங்கள் ‘கர்ப்பால் நினைவுகள்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக, அவருக்கு அஞ்சலியாக அடுத்த சில நாட்களுக்கு வெளிவரும்)