Home நாடு கர்ப்பால் நினைவுகள் # 5 : “அரசியலில் எனது எதிர்ப்பாளர் என்றாலும் மரணச் செய்தி கேட்டு...

கர்ப்பால் நினைவுகள் # 5 : “அரசியலில் எனது எதிர்ப்பாளர் என்றாலும் மரணச் செய்தி கேட்டு கண்ணீர் விட்டேன்” – சாமிவேலு

666
0
SHARE
Ad

Samy karpal funeral 440 x 215ஏப்ரல் 22 – கடந்த 40 ஆண்டுகளாக எதிர்முனைகளில் இருந்து அரசியல் போராட்டம் நடத்தியவர்கள் கர்ப்பால் சிங்கும், ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவும்!

#TamilSchoolmychoice

ஆனாலும், கர்ப்பாலின் மீது கொண்டிருந்த மதிப்பு காரணமாக அவரது மரணச் செய்தி கேட்டதும் கண்ணீர் விட்டு அழுததாக சாமிவேலு தெரிவித்துள்ளார்.

கர்ப்பாலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த சாமிவேலு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறியதுடன்,

“நாங்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக இருந்தோம். பல அரசியல் பிரச்சனைகளில் மோதினோம். ஆனால் அவர் எப்போதும் நம்பிக்கைக்குரிய தலைவராக, எதையும் நிறைவாக, முழுமையாக செய்து முடிப்பவராகத் திகழ்ந்தார்” என நினைவு கூர்ந்தார்.

எத்தனையோ வழக்குகள் இருவருக்கும் இடையில்…

 Samy-Velluகர்ப்பாலும் சாமிவேலுவுக்கும் இடையில் நிகழ்ந்த அரசியல் போராட்டங்கள் மலேசியாவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

இருவருமே ஏறத்தாழ ஒரே நேரத்தில்தான் நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்தனர்.

1974ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முதலாக அலோர்ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினராக ஜசெக சார்பில் கர்ப்பால் நுழைய, அதே ஆண்டில்தான் சாமிவேலுவும் மஇகா சார்பாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார்.

அப்போது முதல், இருவருக்கும் இடையே எத்தனையோ கருத்து மோதல்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்தன.

ஒருமுறை கர்ப்பால், மஇகா தேசியத் தலைவராக இருந்த சாமிவேலுவுக்கு எதிராக சில தவறான விமர்சனங்களை நாடாளுமன்றத்தில் கூறினார்.

அந்த விமர்சனங்களை நாடாளுமன்றத்திற்கு வெளியே கூற தைரியமுண்டா என சாமிவேலுவும் கர்ப்பாலுக்கு சவால் விட, அந்த சவாலை ஏற்றுக் கொண்டு, தலைநகர் சீன அசெம்பிளி மண்டபத்தில் கர்ப்பால் மீண்டும் அந்த விமர்சனங்களைக் கூற அதைக் காண ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டதும் மலேசிய அரசியலில் மறக்க முடியாத ஒரு சம்பவம்.

அதைத் தொடர்ந்து, சாமிவேலு கர்ப்பாலின் மீது மான நட்ட வழக்கு தொடர்ந்தார். அதே போன்று மேலும் சில மான நட்ட வழக்குகளையும் சாமிவேலு தனது அரசியல் போராட்டப் பயணத்தில் கர்ப்பால் மீது தொடுத்துள்ளார்.

சாமிவேலு தேசியத் தலைவராக இருந்த காலங்களில் கர்ப்பாலுக்கும் அவருக்கும் இடையில் அடிக்கடி பத்திரிக்கை அறிக்கை யுத்தங்கள் நிகழும்.

ஆனால், கர்ப்பாலின் மரணம் அந்த இரண்டு மாபெரும் அரசியல் தலைவர்களின் அரசியல் எதிர்ப்புணர்வை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

 கர்ப்பாலுக்கு சாமிவேலு புகழாரம்

karpal-singh-tiger “கர்ப்பால் மக்களுக்குப் பயன்தரக் கூடிய விவகாரங்களைத்தான் எப்போதும் எழுப்பினார். 74 வயதிலும் ஓர் இளைஞருக்குரிய சுறுசுப்புடன் பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் எனது அமைச்சு குறித்த தகவல்களை எப்போதும் அவர் கேட்பார். கூடுதல் தகவல்களை அவர் எப்போது கேட்டபோதும் நான் மறுக்காமல் தந்திருக்கின்றேன்” என்றும் சாமிவேலு கர்ப்பாலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

சாமிவேலுதான் முதன் முதலில் கர்ப்பாலை நீதிமன்றங்களின் புலி என்று வர்ணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“நீங்கள் நீதிமன்றங்களில் புலியாக இருக்கலாம். ஆனால் நான் சிங்கம்” என்று சாமிவேலு ஒரு முறை கூறியிருக்கின்றார்.

“நான் புலியாக இருக்கிறேன். நீங்கள் சிங்கமாக இருங்கள். ஆனால், மலேசியாவில் சிங்கம் இல்லையே” என கர்ப்பால் தனது வழக்கமான நகைச்சுவையோடு திரும்பவும் பதிலளித்திருக்கின்றார்.

இது போன்று எத்தனையோ அரசியல் போராட்டங்கள் அந்த இருவருக்குள்ளும் நிகழ்ந்திருந்தாலும், கர்ப்பாலின் மரணச் செய்தி கேட்டு முதன் முதலில் விரைந்தவர்களில் சாமிவேலுவும் ஒருவர் என்பதுதான் கர்ப்பாலின் மீது அவர் வைத்திருந்த மரியாதையின் அடையாளம்!

-இரா.முத்தரசன்

(பின்குறிப்பு : மறைந்த கர்ப்பால் சிங், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரது மனங்களிலும் பல்வேறு காரணங்களால் இடம் பிடித்தவர். அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியுள்ள விவரங்கள் ‘கர்ப்பால் நினைவுகள்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக, அவருக்கு அஞ்சலியாக அடுத்த சில நாட்களுக்கு வெளிவரும்)