Home நாடு கர்ப்பால் நினைவுகள் # 6 : “கையில் ஆங்கில-மலாய் அகராதியுடன் நீதிமன்றங்களில் கர்ப்பால்”

கர்ப்பால் நினைவுகள் # 6 : “கையில் ஆங்கில-மலாய் அகராதியுடன் நீதிமன்றங்களில் கர்ப்பால்”

621
0
SHARE
Ad

karpalஏப்ரல் 24 – “1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் மலேசிய நீதிமன்றங்களில் தேசிய மொழி பயன்படுத்தப்படும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அதனால் ஆங்கிலத்திலேயே வழக்காடி வந்த பல மூத்த வழக்கறிஞர்கள் மலாய் மொழி தெரியாமல் தடுமாறினர். ஆனால், அப்போது இளம் வயதாக இருந்த கர்ப்பால் சிங், ஆங்கிலத்திலேயே சிங்கப்பூரில் கல்வி கற்றவர் என்றாலும், விடா முயற்சியாக எப்போதும் நீதிமன்றத்திற்கு கையில் ஆங்கில-மலாய் அகராதி புத்தகத்துடன் வருவார். என்னையும் பல முறை மலாய் வார்த்தைகளுக்கான அர்த்தத்தைக் கேட்டிருக்கின்றார்” என கெடாவைச் சேர்ந்த சக வழக்கறிஞர் டத்தோ அகமட் சக்கியுடின் நினைவு கூர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice

73 வயதான அகமட் சக்கியுடின், “நானும் உதவி வழக்கறிஞராக அப்போது அலோர்ஸ்டார் நீதிமன்றங்களில் வழக்காடி வந்தேன். நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு விளங்காத மலாய் வார்த்தை உச்சரிக்கப்பட்டால், அதன் அர்த்தத்தை கர்ப்பால் என்னிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர் நீதிமன்றத்தில் இருந்தால் அவர் எப்படி வழக்காடுகின்றார் என்பதைக் காண்பதற்கு நானும் பெரும்பாலும் அங்கு இருப்பேன்” என்றும் மேலும் கூறினார்.

ஆரம்பத்தில் கர்ப்பால் அலோர்ஸ்டார் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் முதன் முதலில் 1974ஆம் ஆண்டில், அலோர்ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் ஜசெக சார்பில் வென்று நாடாளுமன்றத்தில் காலடி வைத்தார்.

“நான் பார்த்துப் பழகியவரை கர்ப்பால் எனது மனத்தில் என்றைக்கும் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்தார். அவர் மிகவும் கடுமையாக உழைக்கக் கூடிய வழக்கறிஞர். தன் தொழில் மீது அளவிட முடியாத, அபரிதமான, அர்ப்பண உணர்வுடன் பணியாற்றியவர். அதனால் அவர் பெரிய அளவில் என்மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்றும் அகமட் சக்கியுடின் புகழாரம் சூட்டினார்.

நீதிமன்ற வளாகங்களில் புலி என்று புகழப்பட்டாலும், நட்போடும், பழகுவதற்கு இனியவராகவும், உதவி புரிபவராகவும் அவர் இருந்தார் என்றும் கர்ப்பாலைப் பற்றி அகமட் சக்கியுடின் நினைவு கூர்ந்தார்.

அவரது மரணம் சட்டத் துறைக்கு மட்டுமல்லாது மொத்த நாட்டிற்கும் ஒரு பேரிழப்பாகும் என்றும் அவர் வருத்தப்பட்டார்.

அகமட் சக்கியுடின் கர்ப்பாலுடனான தனது நினைவுகளை ஸ்டார் ஆங்கில நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

-இரா.முத்தரசன்

(பின்குறிப்பு : மறைந்த கர்ப்பால் சிங், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரது மனங்களிலும் பல்வேறு காரணங்களால் இடம் பிடித்தவர். அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியுள்ள விவரங்கள் ‘கர்ப்பால் நினைவுகள்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக, அவருக்கு அஞ்சலியாக அடுத்த சில நாட்களுக்கு வெளிவரும்)