பினாங்கு, ஏப்ரல் 24 – புக்கிட் குளுகோர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கர்ப்பால் சிங் கடந்த வாரம் கார் விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அவரது மகன் ராம் கர்ப்பால் சிங் நிறுத்தப்படுவாரா என்பது பற்றி இன்று வியாழக்கிழமை நடைபெறும் ஜசெக அவசரக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
கர்ப்பாலுக்குப் பிறகு அந்த இடத்தை யார் நிரப்புவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என பினாங்கு மாநில ஜசெக தலைவர் சாவ் கோன் இயூ கூறினார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கர்ப்பால் சிங் வகித்து வந்த புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற பதவிக்கான சாத்தியக்கூறான வேட்பாளர் பட்டியலை தாங்கள் இன்னும் தயாரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அத்தொகுதியில் தனக்கு பிறகு தனது மகன் ராம்கர்ப்பால்தான் நிற்க வேண்டும் என்பது கர்ப்பாலின் ஆசை என நியூசிலாந்து பத்திரிகை ஒன்று குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் கூடிய விரைவில் எப்போது இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கின்றதோ அப்போது தான் இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று பினாங்கு ஜசெக தலைவர் கூறினார்.