கோலாலம்பூர், ஏப்ரல் 22 – இந்தியாவுடனான குறைந்த கட்டண விமான சேவையை நிலைநாட்ட ஏர்ஏசியா நிறுவனத்திற்கு இயக்க அனுமதி இவ்வார இறுதிக்குள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து உள்நாட்டுப் போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “எங்கள் குழு சென்னைக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லாத பட்சத்தில் ஏர்ஏசியாவின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஏர்ஏசியா இந்தியா நிறுவனம், இந்தியாவின் உள்நாட்டு போக்குவரத்து நிறுவனம் மற்றும் அரசியல் தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆகியோரின் சட்டப் பூர்வ வழக்கை எதிர்கொள்கிறது.
சுப்ரமணிய சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த அனுமதிக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்நாட்டுப் போக்குவரத்து இலாகாவிடம் முறையிட்டு இந்த அனுமதியை நிறுத்தக் கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் ஏர்ஏசியா, டாடா நிறுவனம் மற்றும் டேலேஸ்டிரா ட்ரேட்ப்ளேஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் ஆகும்.