செப்பாங், ஏப்ரல் 21 – தொழில்நுட்பக் கோளாறு அடைந்த மாஸ் MH192 விமானத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பத்திரமாகத் தரையிறக்கிய விமானியை இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் வெகுவாகப் பாராட்டினார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் சோர்வு அடைந்தாலும், விமானி முறையாக இப்பிரச்சனையைக் கையாண்ட விதத்தை கண்டு நிம்மதியடைந்துள்ளனர். நான் அவர்களை சந்தித்த போது விமானிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்” என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தலைமை விமானி கேப்டன் நோர் ஆடம் அஸ்மி ரசாக் மற்றும் சில விமானப் பணியாளர்களும் உடன் இருந்தனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து மாஸ் ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளதாக ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.