பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 21 – கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் நோக்கிப் புறப்பட்ட மாஸ் MH192 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 4 மணி நேரங்கள் வானில் சுற்றிய பின்னர் மீண்டும் கேஎல்ஐஏ அனைத்துலக விமானம் நிலையத்தை வந்தடைந்தது.
போயிங் 737-200 ரக விமானமான MH192 கேஎல்ஐஏ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பெங்களூருக்கு நேற்று இரவு 10.09 மணியளவில் புறப்பட்ட விமானத்தின் வலது புற தரையிறக்கும் கியரில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
எனினும் விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த விமானி அதிகாலை 1.56 மணியளவில் கேஎல்ஐஏ விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கி உள்ளார்.
இந்த விமானத்தில் 159 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 166 பேர் இருந்தனர்.
இந்நிலையில், இந்த விமானம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் பெங்களூருக்குப் புறப்பட உள்ளது. பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாஸ் MH370 விமானம் 239 பயணிகளுடன் காணாமல் போன மர்மம் இன்னும் நீடித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மாஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கு அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.