சென்னை, ஏப்ரல் 21 – வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபுவை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழக மீனவர் பிரச்சனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வந்தவுடன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.
ஓட்டுக்காக தேர்தல் சமயத்தில் தமிழக மீனவர்கள் மீது கரிசனத்தைப் பொழியும் சோனியா காந்தி, இதற்கு முன்பு இந்தப் பிரச்சனை பற்றி நாடாளுமன்றம் உள்பட எங்காவது பேசியிருக்கிறாரா என்றும் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
கன்னியாகுமரியில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக மீனவர் பிரச்சனையில் அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்றும் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்றும் பேசியுள்ளார்.
இதற்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் மற்றும் அதற்குப் பக்கபலமாக இருந்த தி.மு.க. ஆகியவற்றின் மீனவ விரோதச் செயலுக்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அனைத்துத் தொகுதிகளிலும் நீங்கள் (வாக்காளர்கள்) டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” என்றார் ஜெயலலிதா.