கோலாலம்பூர், ஏப்ரல் 22- அண்மையில் மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டு திரும்பியுள்ள கோத்தபய ராஜபக்சே எதற்கு இங்கு வந்தார் என்றும் இதுபற்றி யாரிடமும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்த அந்த நாட்டின் அமைச்சர் கோத்த பய ராஜபக்சே வருகை குறித்த விவரங்களை ஏன் அரசாங்கம் வெளியிடவில்லை எனவும் இதுதொடர்பாக மஇகா அமைச்சர்கள் எதிர்க்காதது ஏன் என்றும் வழக்கறிஞர் சிவநேசன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி (படம்) கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் ஏன் கோத்தபய ராஜபக்சே வருகையை மூடி மறைத்திருக்கிறது என்பது இந்தியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
“அமைச்சர்களான டத்தோஸ்ரீ பழனிவேலுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியத்திற்கு கண்டிப்பாக இது பற்றி தெரிந்திருக்கும். ஏன் அவர்கள் மூடி மறைத்தனர். அப்பாவித் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சேவை இங்கு வரவழைத்து மாநாட்டில் உரையாற்ற வைத்திருப்பது வெட்கக்கேடான செயல்” என்று இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆவேசமாக கூறினார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறது. இந்த விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படவிருக்கும் வேளையில் கோத்தபய ராஜபக்சேவை மலேசியாவிற்கு வரவழைத்தது மிக வேதனையான செயல் என்றும் பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.
ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்க்கும் நிலையில் மலேசியா மட்டும் அந்த நாட்டு அமைச்சரை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் வினவினார்.