ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 25 – கார் விபத்தில் கர்ப்பால் சிங் காலமானதைத் தொடர்ந்து புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் ஜசெக யாரை நிறுத்தினாலும், அனுதாப அலையினால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதுதான் அனைவரின் அரசியல் கணிப்புமாகும்.
இங்கு கர்பாலின் மகள் சங்கீத் கோர் டியோ அல்லது அவரின் புதல்வர் ராம் கர்ப்பால் நிறுத்தப்படலாமென்று கட்சியினரிடையே ஆருடங்கள் பெருகி வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயரின் பெயரும் அடிபடுகிறது.
ஒருவருக்கு ஒரு தொகுதி என்ற கொள்கையில் கர்ப்பால் சிங் உறுதியாக இருந்து வந்த காரணத்தால் அவரது கொள்கைக்கு மரியாதை தரும் பொருட்டு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் கருதப்படுகின்றது.
அப்படிப் பார்த்தால் ராயரை வேட்பாளராக நிறுத்தும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
மசீச போட்டி
இதற்கிடையில் மசீச புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மசீச தலைவர் லியோவ் அறிவித்துள்ளார்.
இத்தொகுதியில் சீனர் வாக்குகள் அதிகம் உள்ளதாலும் கண்டிப்பாக மீண்டும் இங்கே ஜசெக வெற்றி பெறுவது உறுதி.
அதோடு கர்ப்பாலின் மரணம் ஏற்படுத்தியுள்ள அனுதாப அலையும் இணைந்து ஜசெக மீண்டும் இந்த தொகுதியை வெகு சுலபமாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காஜாங்கில் அண்மையில் மற்றொரு நட்சத்திர வேட்பாளர் வான் அசிசாவை எதிர்த்து நின்று தோல்வியைத் தழுவ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்ட மசீசவுக்கு இப்போது மற்றொரு தலையிடி.
தோற்கப் போகின்றோம் என நன்கு தெரிந்தே, புக்கிட் குளுகோரில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு மசீச மீண்டும் ஒருமுறை தள்ளப்பட்டுள்ளது.