Home நாடு மலாக்கா நீரிணையில் கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் தொடர்கிறது

மலாக்கா நீரிணையில் கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் தொடர்கிறது

524
0
SHARE
Ad

Straits of Malacca map 440 x 215கோலாலம்பூர், ஏப்ரல் 25 – மலேசியாவிற்கும், இந்தோனேஷியாவிற்கும் நடுவே இருக்கும் ஸ்ட்ரெயிட்ஸ் ஆஃப் மலாக்கா (Straits of Malacca) என்ற மலாக்கா நீரிணை உலகக் கப்பல் போக்குவரத்திற்கான முக்கிய வழியாகும்.

தினமும் பல நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணை வழியாக தங்களின் பயணத்தை மேற்கொள்கின்றன.

இந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்களின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டதால் இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து அந்தப் பகுதிக்கான ரோந்துப் படையினரின் பாதுகாப்பினை அதிகரித்தன.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக வருடத்திற்கு 20 தாக்குதல்கள் என்ற எண்ணிக்கையில் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இதே பகுதியில் மீண்டும் ஒரு கடற்கொள்ளைத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

ஐந்து மில்லியன் லிட்டர் டீசலுடன் சிங்கப்பூரில் இருந்து மியான்மருக்குச் சென்றுகொண்டிருந்த நனிவா மரு என்ற சரக்குக் கப்பலை நேற்று முன்தினம் அதிகாலை ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் வளைத்துள்ளனர்.

அதிலிருந்த தாய்லாந்து, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஊழியர்களைக் கட்டிப்போட்டுவிட்டு தங்களுடன் வந்த மற்ற இரண்டு கப்பல்களில் மூன்று மில்லியன் லிட்டர் டீசலை கடற் கொள்ளையர்கள் மாற்றியுள்ளனர்.

பல மணி நேரம் பிடித்த இந்த செயலுக்குப் பின்னர் மூன்று இந்தோனேஷிய ஊழியர்களைத் தங்களுடன் பிணைக்கைதிகளாக அழைத்துக்கொண்டு கடற் கொள்ளையர்கள் தப்பியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட கப்பல் ஜப்பானைச் சேர்ந்தது என்று முதலில் அடையாளம் காணப்பட்டாலும் அது சிங்கப்பூர் நிறுவனத்திடம் விற்கப்பட்டது என்று மலேசிய கடற்படை காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹீம் அப்துல்லா குறிப்பிட்டார்.

மேலும், விசாரணைக்காக இந்தக் கப்பல் தற்போது மலேசிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடந்த கடற் கொள்ளை நீண்ட நேரம் நிகழ்ந்துள்ளதால் இதில் கப்பலின் பணியாளர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதில் காவல் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.