சுபாங், ஏப்ரல் 26 – பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மலேசிய வருகை இன்று தொடங்கியது.
அவர் பயணம் செய்த ‘ஏர்ஃபோர்ஸ் 1’ (Air Force One) என்ற சகல வசதிகளுடன் கூடிய விமானம் தென் கொரியாவிலிருந்து புறப்பட்டு 6 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று பிற்பகல் 4.50 மணியளவில் சுபாங்கிலுள்ள அரச மலேசிய ஆகாயப் படைத் தளத்தின் விமான நிலையத்தில் வந்திறங்கியது.
நான்கு நாடுகளில் மூன்றாவது நாடாக மலேசியாவுக்கு வருகை தரும் ஒபாமா திங்கட்கிழமை பிலிப்பைன்சுக்குப் பயணமாவார்.
வரவேற்ற அமைச்சர்கள்…
கறுப்பு நிற கோட் சூட் உடையுடன் வந்திறங்கிய ஒபாமாவை மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், அமெரிக்காவுக்கான மலேசியத் தூதர் டத்தோ டாக்டர் அவாங் அடெக் ஹூசேன் மற்றும் அமெரிக்காவுக்கான பிரதமரின் சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஆகியோர் முன்னின்று வரவேற்றனர்.
அமெரிக்க அதிபரின் உடன் செல்லும் அமைச்சராக கைரி ஜமாலுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒபாமா வருகையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பாதுகாப்பு அதிகாரிகள் சுபாங் ஆகாயப் படை விமானத் தளத்தை சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ஒபாமா நேரடியாக, அவரது பிரத்தியேக காரில், கோலாலம்பூரிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு அதிகாரபூர்வ சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்படும்.
கோலாலம்பூரில் ஒபாமா பயணம் செய்யப்போகும் கார் அவருக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒபாமா நஜிப்புக்கு இடையிலான பேச்சு வார்த்தைகளில் மற்ற அம்சங்களுடன் காணாமல் போன மாஸ் விமானத்தின் தேடுதல் பணிகள் முக்கிய இடத்தை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காணாமல் போன எம்எச் 370 விமானத்தை தேடும் பணியிலும், அதைக் கண்டுபிடிக்கும் புலனாய்வுகளிலும் அமெரிக்க அரசாங்கம் முன்னணி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பேரரசருடன் இன்று இரவு சந்திப்பு
இன்று இரவு மலேசியப் பேரரசரைச் சந்திக்கும் ஒபாமா, அப்போது பேரரசர், இஸ்தானா நெகாரா எனப்படும் பேரரசரின் மாளிகையில் வழங்கும் அரச விருந்துபசரிப்பிலும் கலந்து கொள்வார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வ ஓய்வு நாளானாலும், ஒபாமாவுக்கும் நஜிப்புக்கும் ஓய்விருக்கப் போவதில்லை.
நாளை ஞாயிற்றுக்கிழமை புத்ரா ஜெயா செல்லும் ஒபாமா அங்கு நஜிப்புடன் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வார்.
பின்னர் அருகில் உள்ள தகவல் தொலைத் தொடர்பு நகரான சைபர் ஜெயாவில் ‘மலேசிய-அனைத்துலக புத்தாக்க மற்றும் படைப்பாக்க மையத்தை (Malaysian Global Innovation and Creative Centre) தொடக்கி வைப்பார்.
இந்த மையம் வணிகர்களுக்கு தங்களின் தொழில் விரிவாக்கத்திற்கான தளமாகத் திகழும்.
தனது வருகையின் போது, தென்கிழக்காசியாவின் இளைய தலைமுறைத் தலைவர்களைச் சந்தித்து உரையாடவிருக்கும் ஒபாமா, கோலாலம்பூரிலுள்ள தேசிய பள்ளி வாசலுக்கும் வருகை தருவார்.
நாளை, அவர் மலேசியாவிலுள்ள மக்கள் இயக்கப் போராட்டவாதிகள், சமூக ஆர்வலர்கள், இஸ்லாமிய இயக்கத்தினர், மற்ற மத ரீதியான அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரை அமெரிக்கத் தூதரகத்தில் சந்ததித்து அளவளாவுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.