மும்பை, ஏப்ரல் 28 – கடந்த 2013–14 -ம் நிதியாண்டில், இந்தியா மற்றும் தென்ஆப்ரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தகம்,760 கோடி அமெரிக்க டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில்,580 கோடி டாலராக இருந்தது.
இதனால் இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தகம்,31 சதவீதம் அதிகரித்துள்ளது என தென் ஆப்ரிக்காவின் துணைத் துாதர் புலே ஐ மால்பேன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
“முந்தைய, 2012–13ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், சென்ற நிதியாண்டில், தென் ஆப்ரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, 3.8 சதவீதத்தில் இருந்து, 2.5 சதவீதமாக குறைந்துள்ளது.இந்நிலையிலும், நல்லுறவின் காரணமாக, இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தகம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.”
“கடந்த நிதியாண்டில் மட்டும், இந்திய நிறுவனங்கள், தென் ஆப்ரிக்காவில், 1,500 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன.மேலும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், எக்சிம் வங்கியின் புதிய கிளை, தென் ஆப்ரிக்காவில் துவங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.” இவ்வாறு மால்பேன் கூறினார்.