கோலாலம்பூர், ஏப்ரல் 28 – மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் தனிப்பட்ட சந்திப்பு நடத்தாத காரணத்தால், அவரது விவகாரத்தில் தனக்கு அக்கறை இல்லை என பொருள் கொள்ளக் கூடாது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
நேற்று பிரதமர் நஜிப்புடனான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒபாமா பேசும் போது இவ்வாறு கூறினார்.
அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, அன்வார் மீதான ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டுகள் குறித்து ஏன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை எனக் கேட்கப்பட்டபோது ஒபாமா “அன்வாரை நான் சந்திக்கவில்லை என்பதற்காக அவரது விவகாரத்தில் எனக்கு அக்கறையில்லை என பொருள் கொள்ளக் கூடாது. நான் பலரைச் சந்திக்க முடிவதில்லை. பல எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க முடிவதில்லை. அதற்காக நான் அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை எனப் பொருள் கொள்ளக் கூடாது” என்று கூறினார்.
அவரது பதில் குறித்த விவரங்களை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்வார் மீதான அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக புனையப்பட்டவை என அமெரிக்கா தொடர்ந்து பல முறை கூறி வந்துள்ளது.
ஒபாமா அன்வாரை நேரடியாகச் சந்திக்காவிட்டாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூடிய விரைவில் அன்வாரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“அரசாங்கத்திற்கும் அன்வாருக்கும் எதிரான போராட்டமல்ல” – நஜிப்
ஒபாமாவுடனான இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நஜிப், “அன்வாருக்கு எதிரான வழக்கு அவருக்கு எதிரான அரசாங்க நடவடிக்கையல்ல. மாறாக, அவரது முன்னாள் ஊழியர் அவருக்கு எதிராக எடுத்த புகாரின் அடிப்படையிலான நடவடிக்கையாகும். சட்டத்தின் முன் சிறியவர், பெரியவர் என்ற வித்தியாசம் இல்லை. ஆனால், அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி மேலும் கருத்துரைப்பது முறையாகாது” என்று தெரிவித்தார்.
இந்த விவரங்களை மலேசியாகினி இணையத் தளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஒபாமாவின் வருகையை வைத்து, சரிந்து கொண்டிருக்கும் தனது அரசியல் செல்வாக்கையும், எம்எச் 370 விவகாரத்தால் உலக அரங்கில் இழந்து போன மரியாதையையும் தூக்கி நிறுத்த, நஜிப்பின் அரசாங்கம் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றது.
இருப்பினும், ஒபாமா வருகையின் போது அடிக்கடி தகவல் ஊடகங்களும், சம்பந்தப்பட்டவர்களும், அன்வாரின் பெயரை – அவரது விவகாரத்தை முன் நிறுத்துவதை நஜிப் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த இயலவில்லை.