ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய ‘கோச்சடையான்’ படம், வருகிற 9-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷராப், தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.
கே.எஸ்.ரவிகுமார் கதை–திரைக்கதை–வசனம் எழுதியிருக்கிறார். ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு, ‘லிங்கா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் பக்தர். அதற்கு அடையாளமாக தனது மூத்த பேரனுக்கு, ‘லிங்கா’ என்று பெயர் சூட்டினார்.
பேரனின் பெயரையே தனது புதிய படத்துக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார்.
படப்பிடிப்பு மைசூரில், நேற்று செவ்வாய்கிழமை தொடங்கியது. இதற்காக, ரஜினிகாந்த் நேற்று மைசூர் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 40 நாட்கள் தங்கியிருந்து, ‘லிங்கா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்தது.