கோலாலம்பூர், மே 9 – எம்.எச். 370 விமானத்தைப் பற்றி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தற்போது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
மாஸ் நிறுவனத்தின் காணாமல் போன விமானம் எம்எச் 370 அதன் பயணத்தை உண்மையிலேயே இந்தியப் பெருங்கடலில் முடித்துக்கொண்டதா என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது வலைத் தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வளவு பெரிய விமானம் பல துண்டுகளாக உடையாமல் அப்படியே ஆழ்கடலில் மூழ்க முடியுமா என டாக்டர் மகாதீர் இன்று வெளியிட்ட தனது வலைப்பதிவில் கேட்டுள்ளார்.
“கண்ணாடி, அலுமினியம், டைட்டானியம், கூட்டுப் பொருட்களினால் ஆன கனமான அவ்விமானம் கடலினுள் மூழ்கி உடையாமல் இருக்குமா?” என்றும்,
“கடல் அமைதியாக இருந்தால்கூட அந்த விமானம் உடைந்திருக்கும். ஆனால், அந்த விமானம் உடையாமல் அப்படியே மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. அது சாத்தியமா?” என்றும் மகாதீர் கேள்விக் கணைகள் தொடுத்துள்ளார்.
“ஆனால், இது நாள்வரை அவ்விமானம் உடைந்ததைக் குறிக்கும் அறிகுறி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றார் துன் மகாதீர்.
போயிங் நிறுவனமும் காரணமா?
எம்எச்370 காணாமல் போன விஷயத்தில் அவ்விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராகவும் துன் மகாதீர் குறைகூறலைத் தொடக்கியுள்ளார்.
அவ்விமானத்தின் தகவல் தொடர்பு சாதனம் செயலிழந்து போனதற்கு அவ்விமானத்தைத் தயாரித்த நிறுவனத்தைப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் விமானம் காணாமல் போன விஷயம் தொடர்பில் அது மௌனம் சாதிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
“இவ்விஷயத்தில் போயிங் மிகவும் அமைதியாக உள்ளது. தனது விமானத்தில் தகவல் தொடர்பு முறையும் விமான இருப்பிடத்தை கண்காணிக்கும் முறையும் எப்படி செயலிழக்கக்கூடும் என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் ஏதும் தரவில்லை” என்றும் துன் மகாதீர் தனது வலைப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவ்விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை, அதன் தகவல் தொடர்புத் துறை எவ்வாறு செயலிழந்தது என்பதைத் தீர்மானிக்கும் வரை போயிங் விமானங்கள் பயணம் செய்ய ஆபத்தானவை என அனைவரும் முடிவெடுக்க வேண்டும் என்றும் தனது வாதத்தை தனது கட்டுரையில் துன் மகாதீர் முன் வைத்துள்ளார்.