ரோம், மே 10 – கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடலோரப் பகுதியில், இரு இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மீது இந்தியாவில் வழக்கு நடைபெறுவது தொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது இத்தாலிய சுற்றுப்பயணத்தின்போது விவாதித்ததாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் உதவி செய்தித் தொடர்பாளர் வன்னினா மேஸ்ட்ராக்கி கூறுகையில், “ரோமில் கடந்த புதன்கிழமை இத்தாலி அதிகாரிகளை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் சந்தித்தார். அப்போது நடை பெற்ற விவாதத்தில், இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் மீதான வழக்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இத்தாலி சென்றுள்ள பான் கி- மூன், அந்நாட்டு அதிபர் ஜியார் ஜியோ நபோலிடனோ, பிரதமர் மாட்டியோ ரென்ஸி, செனட் தலைவர் பியட்ரோ கிராஸ்ஸோ ஆகியோரை புதன்கிழமை சந்தித்தார். இத்தாலி கடற்படை வீரர்கள் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதால், அதனை சர்வதேச கவனத்துக்கு இத்தாலி கொண்டு சென்றுள்ளது. மேலும், இந்த பிரச்னைக்கு சர்வதேச தீர்ப்பாயம் மூலம் தீர்வு காண, இந்தியா ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
இப்பிரச்சினை இருநாடுகளின் தூதரக உறவில் விரிசலை ஏற்படுத்தியது. கடற்படை வீரர்கள் மீதான விசாரணை இத்தாலியில் நடைபெற வேண்டும் என அந்நாட்டு அரசு விரும்புகிறது. ஆனால், வழக்கை விசாரிக்கும் உரிமை இந்தியாவுக்குத்தான் உள்ளது என இந்தியா உறுதியாகத் தெரிவித்து வருகிறது.