Home India Elections 2014 செல்லியல் தேர்தல் பார்வை # 3 : தமிழ் நாட்டில் கலவையான – முரண்பாடான அரசியல்...

செல்லியல் தேர்தல் பார்வை # 3 : தமிழ் நாட்டில் கலவையான – முரண்பாடான அரசியல் முடிவுகள் சாத்தியம்

632
0
SHARE
Ad

jayalalithaமே 11 – எதிர்வரும் மே 16ஆம் தேதி இந்தியாவின் தேர்தல் தலைவிதி தெரிந்துவிடும் என்றாலும், அதற்கு முன்பாக தமிழ் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கான ஓர் சிறிய அலசல்தான் இந்தக் கட்டுரை.

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தமிழ் நாட்டில் நடந்த 6ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் கலவையானதாக, யாராலும் ஊகிக்க முடியாத ஒன்றாக, தொகுதிக்கு ஒரு மாதிரியாக,

மாறுபட்ட அரசியல் முடிவுகளைத் தெரிவிக்கும் விதமாக அமைந்திருக்கும் என்பதுதான் நமது கணிப்பு.

#TamilSchoolmychoice

காரணம், கடந்த 40 ஆண்டுகளில் இதுபோன்றதொரு தேர்தல் களத்தை தமிழ் நாட்டு மக்கள் சந்தித்தது இல்லை.

எப்போதுமே இரண்டு அணிகளாகத்தான் கட்சிகள் தமிழ் நாட்டில் பிரிந்து நின்று போட்டியிடுவார்கள்.

தமிழ் நாட்டு மக்களுக்கும் அதனால்தான் தேர்தல் தருணங்களில் கட்சிகளைத் தேர்வு செய்வது சுலபமானதாக இருந்தது.

ஆனால், இந்த முறை நடந்தது 5 முனைப் போட்டி என்பதால் – இதுவரை தமிழகம் காணாத தேர்தல் களம் என்பதால் – ஒவ்வொரு தொகுதியும் தனித் தனியாக – ஒவ்வொன்றும் ஒரு பிரத்தியேக செய்தியை சொல்வது போல் முடிவுகள் அமையப் போகின்றது.

அதிமுக 25 தொகுதிகளுடன் முன்னணி வகிக்கும்

jayaதேர்தலுக்கு முன்பாக தனது சாமர்த்தியமான வியூகங்களால், தமிழ் நாட்டுக் கட்சிகளை ஒன்று சேர விடாமல் தடுத்து விட்டவர் ஜெயலலிதா.

முதலில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்து அதன் மூலம் காங்கிரசோடு இணைய முடியாமல் திமுகவுக்கு ஒரு சிக்கலை உருவாக்கினார்.

தமிழக அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் மேல் முறையீடு செய்ய அதனால், ஏற்படப்போகும் பாதிப்புகளை உணர்ந்து திமுக, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து நழுவிக் கொள்ள – காங்கிரஸ் தனித்து விடப்பட்டது.

இந்த முறை நாடு தழுவிய அளவில் வீசும் மோடி அலையாலும் – இந்தியர்களிடையே கம்யூனிஸ்ட் கட்சி மீதான மோகமும் ஆதரவும் குறைந்து வருவதாலும் –

கம்யூனிஸ்ட் கட்சிகளால் பலனில்லை என்பதை சரியாக கணக்கெடுத்த ஜெயலலிதா அவர்களையும் தனது அணிக்குள் கொண்டு வரவில்லை.

இதனால் 40 தொகுதிகளிலும் முதன் முறையாக போட்டியிடுகின்ற துணிச்சலான முடிவை – இதுவரை எம்.ஜி.ஆர் கூட தன் அரசியல் வாழ்நாளில் எடுக்காத முடிவை – இந்த முறை ஜெயலலிதா எடுத்தார்.

ஆளும் கட்சி என்ற பலம் – இதுவரை பெரிய ஊழல் விவகாரங்களில் மாட்டிக் கொள்ளாத சூழ்நிலை –

அம்மா உணவகம், அம்மா கனிம நீர் போன்ற மக்கள் நலத் திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் நற்பெயர் –

சில தொகுதிகளில் ஏற்கனவே இருக்கும் ஆதரவு பலம் –

இவற்றால் அதிமுக ஏறத்தாழ 25 தொகுதிகள் வரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், அதிமுக வேட்பாளர்களில் பலர் புதியவர்கள் – அரசியல் அனுபவமோ, பலமோ இல்லாதவர்கள் என்பதால் –

தங்களின் கட்சி பலத்தை வைத்து – ஜெயலலிதாவின் புகழை வைத்துத்தான் – அவர்கள் இந்த முறை வெற்றிக்கொடி நாட்ட முடியும்.

இதனால்தானோ என்னவோ, அதிமுக சார்பில் சொந்த பலம் கொண்ட வேட்பாளர்களாக குறிப்பிடத்தக்க யாரையும் சுட்டிக் காட்ட முடியவில்லை.

எனவே, அதிமுக, தனித்த பலத்தினால் 25 தொகுதிகள் வரை வெல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலையோ – சிக்கலோ ஏற்பட்டால், அதிமுகவும் ஜெயலலிதாவும் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

இருந்தாலும், பாஜக கூட்டணி வட நாட்டில் வலுவாக இருப்பதால், மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் பலம் இந்த முறை அதிமுக போன்ற தென்னிந்திய கட்சிகளுக்கு வாய்க்காது என நம்பலாம்.

மற்ற கட்சிகளின் நிலைமை…

14-anbumani-ramadoss300இதைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் அந்தந்தத் தொகுதிகளில் தங்களின் கட்சிக்கும், வேட்பாளருக்கும் உள்ள செல்வாக்கைக் கொண்டுதான் வெற்றி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, தர்ம்புரி தொகுதியில் 40 சதவீத வன்னியர்களின் வாக்கு வங்கி இருப்பதால், அங்கே அன்புமணி ராமதாஸ் வெல்லக் கூடும்.

80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பதிவு செய்து – தமிழ் நாட்டிலேயே அதிகமானவர்கள் வாக்களித்த தொகுதி என்ற பெருமையையும் தர்மபுரி பெற்றுள்ளது.

அதே போன்று, விருது நகர், பாரம்பரியமாக வைகோவின் கோட்டை என்பதாலும்,

vaikoகூடுதலாக இந்த முறை அவருக்குக் கிடைத்திருக்கும், விஜய்காந்த் – மு.க.அழகிரி ஆதரவு, மோடி அலை போன்ற காரணங்களால், மீண்டும் அவர் அங்கே வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதே போன்று, பாஜக வேட்பாளர்கள் கன்யாகுமரியிலும் தென் சென்னையிலும் வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.

பாஜக சார்பில் கன்யாகுமரியில் போட்டியிடும் இராதாகிருஷ்ணன், தென் சென்னையில் போட்டியிடும் இல.கணேசன்-

ஆகிய இருவரும் தமிழ் நாட்டு வாக்காளர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் பாஜக சார்பில் வெல்லக் கூடியவர்களாக பார்க்கப்படுகின்றார்கள்.

_L_GANESAN_1385eஇல.கணேசன் போட்டியிடும் தென் சென்னை தொகுதியில் கணிசமான பிராமண வாக்காளர்கள் இருக்கின்ற காரணத்தால், அதே பிராமண சமூகத்தைச் சார்ந்த கணேசன் இந்த முறை வெற்றி பெறக் கூடும்.

விஜய்காந்த் கட்சியைப் பொறுத்தவரையில், சேலம் தொகுதியில் போட்டியிடும் அவரது மைத்துனர் சுதீஷ் ஒருவர் மட்டுமே கொஞ்சம் வாய்ப்புள்ள, அறிமுகமான வேட்பாளராகத் தென்படுகின்றார்.

மற்றவர்களெல்லாம், யார் எங்கே நிற்கின்றார்கள் – அவர்களின் வெற்றி வாய்ப்புகள் எப்படி என்பது போன்ற விவரங்கள் சரிவர இல்லை.

வைகோவுக்கும் அதே நிலைமைதான்.

அவரைத் தவிர வேறு யாரையும் மதிமுகவில் வலுவான வேட்பாளராகப் பார்க்க முடியவில்லை.

அன்புமணி இராமதாசைத் தவிர்த்துப் பார்த்தால், பாட்டாளி மக்கள் கட்சியிலும் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை.

திடீர்க் கூட்டணி

திடீரென அமைந்த கூட்டணி – அதோடு காலம் முழுவதும் ஒன்றோடு ஒன்று கருத்து வேறுபாடுகளால் மோதிக் கொண்ட கட்சிகள் வேறு வழியின்றி அரசியலுக்காக கைகோர்த்துக் கொண்ட கூட்டணி –

போன்ற காரணங்களால், பாஜக கூட்டணி என்பதாலேயே அதில் உள்ள கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் ஆதரித்துக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது.

எனவேதான், பாஜக கூட்டணியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் சொந்த பலமும் கொஞ்சம் தேவைப்படுகின்றது.

இப்படியாக பாஜக கூட்டணி சுமார் 5 நாடாளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றினாலே அது அதிமுக – திமுக திராவிடக் கட்சிகளுக்கு எதிரான மாபெரும் வெற்றியாக அரசியல் ரீதியாகப் பார்க்கப்படும்.

அப்படி வெல்லக் கூடிய 5 பாஜக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர்களும், தங்களின் சொந்த செல்வாக்கைக் கொண்டுதான் வெற்றிக் கொடி நாட்ட முடியுமே தவிர, முழுக்க முழுக்க கூட்டணி பலத்தால் வெல்ல முடியாது என்பதுதான் உண்மை நிலை.

காங்கிரசின் பரிதாப நிலைமை

karti_pchidambaram_20110305காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலில் துடைத்தொழிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை என்றாலும்,

இராமநாதபுரத்தில் போட்டியிடும் எஸ்.எஸ்.திருநாவுக்கரசும், சிவகங்கையில் போட்டியிடும் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் தங்களின் சொந்த செல்வாக்கால் கொஞ்சம் கூடுதலான வாக்குகளைப் பெற முடியும்.

ஆனால், வெல்ல முடியுமா என்பது கேள்விக் குறிதான்!

அப்படியே காங்கிரஸ் வெல்வதாக இருந்தால் இந்த இரண்டு தொகுதிகளில்தான் வெல்ல முடியும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.

சகோதர யுத்தத்தால் தடுமாறும் திமுக…

stalinதிமுக இந்த முறை மோசமான தோல்வியைச் சந்திக்கும் நிலைமை ஏற்படலாம் என்பது பலரது கணிப்பு.

தென்மாநிலங்களில் மு.க.அழகிரியின் அதிரடி அரசியலால் செல்வாக்கைக் கொண்டிருந்த திமுக இந்த முறை அழகிரி பிரிந்து நிற்பதால் நிச்சயம், சரிவைத்தான் சந்திக்கும்.

ஸ்டாலின் ஒருவர் மட்டுமே சுற்றிச் சுழன்று வந்து ஆதரவு தேடியிருப்பதால், திமுக மோசமாக தோற்றால் அது ஸ்டாலினின் நேரடி தலைமைத்துவ ஆற்றலைப் பாதிக்கும்.

கருணாநிதியின் வழக்கமான பிரச்சாரம் வாக்காளர்களை அவ்வளவாகப் பாதித்ததாகத் தெரியவில்லை. திசை தெரியாத பிரச்சாரமாக அவரது பிரச்சாரம் அமைந்தது என்பதால் – மத்தியில் யாரையும் ஆதரிக்காத பிரச்சாரம் என்பதால் – மக்களை இந்த முறை அவரால் கவர முடியவில்லை.

jan-28-karunaஅவரது வயதும், உடல் நிலையும் கூட மற்ற காரணங்கள்!

இதனால், திமுகவின் மோசமான தோல்வி, அழகிரியை மீண்டும் திமுக குடும்ப அரசியலுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் என்பது ஒரு சில அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.

ஆனால், திமுக மட்டும் சுமார் 10 இடங்களைப் பிடித்து விட்டால், அதன் மூலம் ஸ்டாலினின் பலம் திமுகவில் பன்மடங்காக உயர்ந்து விடும்.

இருப்பினும், இருக்கின்ற சூழ்நிலையில் 5 இடங்களைப் பிடித்தாலே அது திமுகவுக்கு பெரிய வெற்றிதான். அப்படியே கூடுதலாக சில இடங்கள் கிடைத்தால் – அது சில திமுக புள்ளிகளின் சுயபலத்தால் கிடைத்ததாக இருக்குமே தவிர – கட்சி பலத்தால் கிடைத்த வெற்றியாக இருக்காது.

இப்படியாக, தொகுதிக்கு ஒரு விதமான முடிவாக – வெவ்வேறு அரசியல் கோணங்களை எடுத்துக்காட்டும் – கலவையான தேர்தல் முடிவுகளை வழங்கப் போகும் வித்தியாசமான மாநிலமாக –

இந்த முறை தமிழகம் திகழப் போகின்றது!

அதே சமயம், தேசிய அளவில் கலக்கி வரும் பாஜக, காங்கிரஸ் இரண்டு தேசியக் கட்சிகளும் கால்ஊன்ற இன்னும் கஷ்டப்படும் மாநிலமாகவும் –

இந்தப் பொதுத் தேர்தலில் தமிழ் நாடு தன்னை காட்டிக் கொள்ளப் போகின்றது.

-இரா.முத்தரசன்