Home இந்தியா வைகோ – அன்புமணி – இராதாகிருஷ்ணன் –தயாநிதி வெற்றி! : நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு

வைகோ – அன்புமணி – இராதாகிருஷ்ணன் –தயாநிதி வெற்றி! : நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு

787
0
SHARE
Ad

Vaiko - Modi 440 xசென்னை, மே 15 – நாளை இந்தியப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் வேளையில், பிரபல இந்தியத் தொலைக்காட்சியான நியூஸ் எக்ஸ் (News X) வாக்களிப்புக்கு பிந்திய கருத்துக் கணிப்புகளை தொகுதி வாரியாக வெளியிட்டு வருகின்றது.

தமிழ் நாட்டில் அந்த ஆங்கிலத் தொலைக்காட்சி பிரபல சந்தை ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் விருது நகரில் போட்டியிடும் வைகோ வெற்றிவாகை சூடுவார் என்று கணித்துள்ளது.

வைகோ போன்று தமிழகத்திற்காக – தமிழுக்காக – தமிழர்களுக்காக – அதுவும் உலகத் தமிழர்களுக்காக வாதாடுபவர்கள் யாரும் இருக்க முடியாது. எனவே, அவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தை அலங்கரித்தால் அதன் மூலம் தமிழின் குரல், அரசியல் பாரபட்சமின்றி புதுடில்லியில் ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

#TamilSchoolmychoice

அன்புமணி வெற்றி பெறுவார்

anbumaniஅதே போன்று, தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி இராமதாஸ் வெற்றி பெறுவார் என்று அந்த தொலைக்காட்சியின் கணிப்பு சுட்டிக் காட்டியுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் – 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட – வாக்குப் பதிவைப் பெற்ற தொகுதி தர்மபுரியாகும்.

இந்த தொகுதியில் வன்னியர்கள் ஏறத்தாழ 40 சதவீதம் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி இராமதாஸ் சார்ந்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னிய வாக்காளர்களின் பிரதிநிதித்துவ கட்சியாகப் பார்க்கப்படுவதால் – அதனால் வன்னியர் பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்ததால் இந்த அதிகபட்ச வாக்குப் பதிவு நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

பாஜகவின் இராதாகிருஷ்ணன் கன்யாகுமரியில் வெற்றி

07THKRISHNAN_140164eகன்யாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜகவின் சி.பி.இராதாகிருஷ்ணன் (படம்) அந்த தொகுதியில் வெல்வார் என்றும் நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடியே கன்யாகுமரி வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக நேரடியாக வெல்லக் கூடிய ஒரு சில தொகுதிகளில் ஒன்றாக கன்யாகுமரி கருதப்படுகின்றது.

தயாநிதி மாறன் வெற்றி – ராசா தோல்வி

மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் ரேகைகள் பலமாகப் பதிந்திருந்தாலும், அவரது இளமையான தோற்றம் – கடந்த கால அமைச்சர் பணிகள் – சென்னையில் எப்போதுமே திமுகவுக்கு இருக்கும் ஆதரவு பலம் – சன் டிவியின் தகவல் ஊடக பலம் – மற்றும் சகோதரர் கலாநிதி மாறன் பின்னணியில் இருக்கும் பணபலம் இப்படி எல்லாமுமாக ஒன்று சேர்ந்து மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தயாநிதி மாறன் வெல்வார் என்று நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

Dayanidi Maran 440 x 215ஆனால், 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி இந்திய அளவில் புகழ் பெற்று விட்ட ஆ.ராசா நீலகிரி தொகுதியில் தோல்வியடைவார் என நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

இங்கே அதிமுக வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னையில் திமுகவின் வேட்பாளர் இளங்கோவன் தோல்வியைச் சந்திப்பார் என்றும் இந்த தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெறும் எனக் கணித்துள்ள, நியூஸ் எக்ஸ் அந்த தொகுதி எது என்பதைக் குறிப்பிடவில்லை.

பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வைப்புத் தொகையையே இழக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இரா.முத்தரசன்