புதுடில்லி, மே 14 – எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியப் பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் ஒன்றாகக் கூடி தங்களின் அடுத்த கட்ட வியூகங்களையும் புதிய அரசாங்கம் குறித்த திட்டங்கள் பற்றியும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் படத்திற்கு மாலையிட்டு பாஜக ஆதரவாளர்கள் வணங்குவதை புகைப்படம் காட்டுகிறது.
எந்தெந்த கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்பது குறித்தும் அப்படியே எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்காவிட்டால் வெளியில் இருந்து எந்தெந்த கட்சிகளிடமிருந்து ஆதரவு கோரலாம் என்றும் அவர்கள் விவாதித்துள்ளனர்.
அவ்வாறு பெரும்பான்மை பெறுவதில் பாஜக தவறினால், அவர்கள் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முக்கிய பங்காற்றும் நிலையில் – அவர்களுக்கு கைகொடுக்கும் நிலையில் – ஜெயலலிதா இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லியில் கூடியுள்ள பாஜகவின் முன்னணித் தலைவர்கள் இதுபற்றி தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்.
பாஜக தலைவர்களின் சந்திப்பு
இன்று பாஜவின் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றொரு முக்கியத் தலைவரான சுஷ்மா சுவராஜை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.
முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்காரியும் சுஷ்மாவை இன்று சுமார் அரைமணி நேரம் சந்தித்தார்.
பாஜகவில் இயங்கும் பல்வேறு தலைவர்களின் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒருங்கிணைப்பாளராக நிதின் கட்காரி திகழ்கின்றார்.
நேற்று அவர் பாஜ கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்து அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் அத்வானியின் பங்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதேவேளையில் அமிர்தசரஸ் வேட்பாளரும் பாஜகவின் முக்கியத் தலைவருமான அருண் ஜெட்லியுடன் நரேந்திரமோடியின் நெருங்கிய ஆலோசகர் அமிட் ஷா சந்திப்பு நடத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை அன்று மோடி என்ன செய்வார்?
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி புதுடில்லி வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி நண்பகல் 12.00 மணி வரை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்து தேர்தல் முடிவுகளை கண்காணிக்க போகும் மோடி அதன்பின்னர் 2.30 மணிக்கு மேல் புறப்பட்டு டில்லி வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு புதுடில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மற்ற தலைவர்களுடன் ஒன்றாக இருந்து தேர்தல் முடிவுகளை அவர் கண்காணித்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி பாஜக பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் புதிய குஜராத் முதல்வரை தேர்ந்தெடுக்கும் முக்கிய முடிவையும் அன்று மோடி மேற்கொள்வார்.
· படம் – EPA