Home அரசியல் அன்வார் குறிப்பிட்ட கால வரம்பை சிவராசா விளக்குகிறார்

அன்வார் குறிப்பிட்ட கால வரம்பை சிவராசா விளக்குகிறார்

672
0
SHARE
Ad

sivarasaகோலாலம்பூர், பிப்.16- பக்காத்தான் ராக்யாட் என்ற மக்கள் கூட்டணி மத்திய அரசாங்க அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏழை இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப் பெருந்திட்டம் 100 நாட்களில் அமலாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது ‘துல்லிதமான கால வரம்பு’ அல்ல எனப் பிகேஆர் சுபாங் எம்பி சிவராசா ராசைய்யா விளக்கிக் கூறினார்

கடந்த வியாழக்கிழமை இரவு ஷா அலாமில் 2,000 பேர், பெரும்பாலும் இந்தியர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அன்வார் அவ்வாறு தெரிவித்ததாக மலேசியாகினி நேற்று செய்தி வெளியிட்டது.

மேலும், செம்பருத்தி செய்தி இணையத் தளம் ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் மலேசிய தமிழ் நாளிதழ்களான தமிழ் நேசன், தினக் குரல், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் ஆகிய நான்கு நாளேடுகளும் பங்கு கொண்டன.

#TamilSchoolmychoice

நாடற்ற மக்கள் பிரச்னையை 100 நாட்களில் தீர்ப்பதாக மட்டுமே அன்வார் உண்மையில் தெரிவித்தார் என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவராசா விளக்கமளித்தார்.

“நாடற்ற இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கும் நடைமுறை துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஹிண்ட்ராப் பெருந்திட்டக் கோரிக்கைகளில் ஒன்று பற்றிக் குறிப்பிட்ட போது அன்வார் அவ்வாறு தெரிவித்தார்,” என சிவராசா தெளிவாக சுட்டிக் காட்டினார்.

“இந்த நாட்டில் நீண்ட காலமாக வாழும் நாடற்ற மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கே 100 நாள் காலவரம்பை அன்வார் தெரிவித்தார். அந்த நாடற்ற மக்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் ஆவர்,” என சிவராசா குறிப்பிட்டார்.

“ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் காணப்படும் சில அம்சங்களை நீங்கள் பார்த்தால் அவற்றை அமலாக்குவதற்கு குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரையில் தேவைப்படுவது உங்களுக்குத் தெரியும். 100 நாட்களில் அந்தத் திட்டங்களை அமலாக்க முடியாது என்பது நிச்சயம். பிரச்சனைகளைக் களையும் நோக்கம் கொண்ட கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு அந்த 100 நாட்கள் மிகவும் குறைவான காலமாகும்,” என்றார் அவர்.