புது டெல்லி, மே 17 – இந்தியாவின் 16வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், நேற்று அதிகப்படியான அந்நிய முதலீட்டின் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 மாத உயர்வை எட்டியுள்ளது.
கடந்த வார நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 59.46 ரூபாயாக இருந்தது. ஆனால் நேற்று ரூபாயின் மதிப்பு சிறப்பான நிலையை எட்டியுள்ளது. நேற்றைய நாணயச் சந்தையில், துவக்கம் முதலே டாலரின் மதிப்பு தொடர்ந்து சரியத் துவங்கியது. இதனால் ரூபாயின் மதிப்பு ரூ.58.69 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைக் கண்டது. அதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக 2013-ம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.42 ஆக இருந்தது. மேலும், கடந்த 10 முதல் 12 வருடங்களில் இத்தகைய சரிவை இந்திய ரூபாய் சந்தித்ததில்லை.
இந்தியாவின் பொருளாதாரம், தேசிய காங்கிரஸின் கடைசி 3 வருட ஆட்சி காலத்தில் மிகவும் மோசமடைந்தது. பணவீக்கத்தின் காரணமாக, அந்நாட்டின் முக்கிய துறைகளான உணவு, வங்கி, நாணய சந்தை, வர்த்தகம் ஆகிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்ற ரகுராம் ராஜனின் சிறப்பான செயல் திட்டங்கள் காரணமாகவும், நிதியமைச்சகத்தின் ஒத்துழைப்பாலும் பொருளாதாரம், தற்போது ஸ்திரத்தன்மையை எட்டியுள்ளதாக பத்திரிக்கைகள் கூறிவருகின்றன.