இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது. நரேந்திர மோடி பிரதமராக வரும் 26-ஆம் தேதியன்று மாலை பதவியேற்கிறார்.
இந்த பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இடம்பெற்றுள்ளார். இந்த தகவல்கள் நேற்று வெளியானது முதலே தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக பொதுச்செயலர் வைகோ, ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது என மோடியை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.
மே 17 இயக்கத்தின் சார்பில் வரும் 25-ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவித்து தமிழக சட்டசபையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் ராஜபக்சே பங்கேற்கும் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலிதா கலந்து கொள்வது சந்தேகமே என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக மூத்த தலைவர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.