சென்னை, மே 23 – 2016 தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் வைகோதானே தவிர விஜயகாந்த் அல்ல என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு தமிழருவி மணியன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “இலங்கைத் தமிழின அழிப்புக்கு உதவிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, தமிழகத்தில் காங்கிரஸ் அழிக்கப்பட வேண்டும்.
திமுக, அதிமுகவிடமிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற நோக்கத்துக்காக பாஜக கூட்டணிக்கு பாடுபட்டேன். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. காங்கிரஸ் 37 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. திராவிடக் கட்சிகளில் ஒன்றை மக்களிடமிருந்து விலக்கி விட்டோம்.
இன்னொரு கட்சியான அதிமுகவுக்கு எதிராக கூட்டணி அமைத்து, 2016-ல் அதையும் படுதோல்வி அடைய வைப்போம். தமிழக மக்கள் பலன் பெற வேண்டுமென்றால், பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளராக வைகோவையே அறிவிக்க வேண்டும்.
அவரது ஒழுக்கம், நேர்மை, நாணயத்தை யாரும் குறை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட கறைபடியாதவராக, களங்க மற்றவராக விஜயகாந்தைக் கூற முடியாது. மத்திய அரசு பதவி தமிழகத்தில் பாஜக அணியை உருவாக்கியதற்காக மத்திய அரசில், எனக்கு பதவி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், அதை ஏற்கும் நிலையில் மணியன் இல்லை. அரசு சார்ந்த அதிகாரத்தில் இருக்க மாட்டேன் என்ற லட்சியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.