Home இந்தியா செல்லியல் பார்வை: பாகிஸ்தான்,இலங்கைக்கு அழைப்பு – மோடி வெளிநாட்டு கொள்கையில் ஆரம்பமே சொதப்பல்

செல்லியல் பார்வை: பாகிஸ்தான்,இலங்கைக்கு அழைப்பு – மோடி வெளிநாட்டு கொள்கையில் ஆரம்பமே சொதப்பல்

696
0
SHARE
Ad

narendra-modiமே 23 – இந்திய மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்த நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கை,  முதல் கட்டத்திலேயே பலத்த விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

வெளிநாட்டுக் கொள்கையில் மிகுந்த மாற்றங்களைக் கொண்டு வருவார் மோடி என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவரது முதல் நடவடிக்கையே சொதப்பலாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அவரது பதவி ஏற்பு விழாவுக்கு அண்டை நாடுகளை அழைத்திருப்பது – குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை நாடுகளின் தலைவர்களை அழைத்திருப்பது – உள்நாட்டில் பலத்த கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியத் தேர்தல் என்பது முழுக்க முழுக்க உள்நாட்டு ஜனநாயகமாகும். இந்தியப் பிரதமர் ஒருவர் தனது பதவியேற்பு விழாவில் அனைத்துக் கட்சிகளை அழைப்பதும் – அனைத்து உள்நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ளச் செய்வதும் பொதுவான நடைமுறைதான்.

பாகிஸ்தான், இலங்கைக்கு அழைப்பு முறையா?

nawazஆனால், வெளியுறவு கொள்கைகளினால் பல சிக்கல்களைக் கொண்ட இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளை எடுத்த எடுப்பிலேயே பதவியேற்பு விழாவுக்கு வரவழைப்பது முறையான ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படவில்லை.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் – எல்லைப் பகுதியில் அடிக்கடி நடக்கும் ஊடுருவல்கள் – இந்திய மண்ணில் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் குண்டு வெடிப்புகள் – இவையெல்லாவற்றுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சில அமைப்புகள்தான் பின்னணியில் செயல்படுகின்றன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில், பிரதமராக பதவியேற்றப் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் முறையான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்தி இருநாடுகளுக்கும் இடையிலான அடிப்படைக் கொள்கைகள்உறவுகள், வகுக்கப்பட்ட பின்னரே பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுக்கு வருவதும் நரேந்திர மோடி பாகிஸ்தான் செல்வதும் சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும்.

ஆனால், அதைவிடுத்து எடுத்த எடுப்பிலேயே அண்டை நாடுகளை அழைப்பது அதிலும் குறிப்பாக பாகிஸ்தானை அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிராக தமிழகம் கொந்தளிப்பு

இதேபோன்ற நிலைமை தான் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும்.

rajapakse-sliderஒட்டுமொத்த தமிழ்நாடே இலஙகை அதிபருக்கு எதிராக ஒன்று திரண்டு நிற்கும் வேளையில், அவரை பதவியேற்பு விழாவுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருப்பது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரிய திராவிடக் கட்சியான திமுகவுக்கு கூட ஓர் இடம் கூட கொடுக்காமல், பாஜகவுக்கு ஒரு இடமும் அதன் கூட்டணி கட்சி பாமகவுக்கு ஒரு இடமும் வெற்றிப் பரிசாகத் தந்திருக்கும் தமிழக மக்களுக்கு மோடியின் செயல் கன்னத்தில் அறைந்ததை போல அமைந்துவிட்டது.

அவருடன் நெருக்கம் பாராட்டிய – அவரது கூட்டணியில் இணைந்துள்ள வைகோ போன்றவர்களே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.

மோடியுடன் நல்லுறவுகளை கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட ராஜபக்சே வருகையினால் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடிக்கு முறையான ஆலோசனை வழங்கப்பட்டதா?

இந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மோடியும் அவரது வெளியுறவு கொள்கை ஆலோசகர்களும் ஒன்றை யோசித்திருக்க வேண்டும்.

பதவியேற்பு விழாவை உள்நாட்டு விழாவாக – அனைத்து கட்சிகளையும் – தேர்தலில் முட்டி மோதிக் கொண்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமை விழாவாக நடத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

எடுத்த எடுப்பிலேயே அண்டை நாடுகளின் தலைவர்களை திருப்திப்படுத்தவோ அவர்களுடன் உறவை உடனடியாக வலுப்படுத்தும் தேவையோ தற்போது மோடிக்கு கொஞ்சமும் இல்லை.

இந்த நிலையில் தனது பதவியேற்பு விழாவிலேயே சர்ச்சைக்குரிய அண்டை நாட்டுத் தலைவர்களை அழைத்து, சில தரப்பினருக்கு மோடி ஏமாற்றம் தந்திருக்கின்றார்.

அதை விடுத்துகடுமையான தேர்தல் பிரச்சாரங்களால் பிளவுபட்டு கிடக்கும் இந்திய அரசியல் கட்சிகளை ஒரு மனதாக ஒன்றிணைக்கும் முக்கியமான பணியைச் செய்திருந்தால் உள்நாட்டில் பாராட்டுகள் குவிந்திருக்கும்.

பாகிஸ்தான், இலங்கை தலைவர்களை உள்ளிட்ட அண்டைநாடுகள் யாரையுமே அழைக்காமல் – உள்நாட்டுத் தலைவர்களை மட்டுமே – உள்நாட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட நிகழ்ச்சியாக தனது பதவியேற்பு விழாவை மோடி நடத்த முற்பட்டிருந்தால் –

அவரது முடிவுக்கு எந்தவித சிக்கலும் – எதிர்ப்பும் இருந்திருக்காது. 

-இரா.முத்தரசன்