மே 24 – கடந்த 1980-ம் ஆண்டு முதல் விமானத் தயாரிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வரும் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம், தற்போது உற்பத்தியை ஆரம்பிக்க முதல் ஹோண்டாஜெட் விமானத்தை வடிவமைத்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2003-ம் ஆண்டு துவங்கப்பட்டது.
உலகிலேயே அழகிய வடிவமைப்பு கொண்ட சிறிய விமானமாக கூறப்படும் ஹோண்டாஜெட்டின் சிறப்பு அம்சங்களாக கூறப்படுவதாவது:-
ஹோண்டாஜெட்டில் ஜிடி ஹோண்டா எச்எஃப்120 இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரம் கொண்ட விமானம் மேலே எழும்பும்போது 2050 lb-ft அழுத்தத்தை (த்ரஸ்ட்) அளிக்க வல்லது.
இறக்கையின் மீதுள்ள பீடத்தில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருப்பதன் மூலம், விமானத்திற்குள் அதிக இடவசதி கிடைக்கும். விமானியின் அறைக்குள் சப்தம் வெகுவாக குறைக்கப்படுகிறது. மேலும், நிமிடத்திற்கு 3,990 அடி உயரம் வரை மேல் எழச்செய்யும்.
இந்த விமானம் குறைவான நைட்ரஜன் டை ஆக்சைட் வாயுவை வெளியிடும். எனவே அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மாசுப்படுத்துதல் குறைக்கப்படும்.
அடுத்த தலைமுறை கார்மின் ஜி3000 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் மூலம் விமானிகளுக்கான கட்டுப்படுத்தும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், டியூவல் டச் ஸ்கிரீன் கன்ட்ரோலர்கள் மற்றும் அதிதுல்லியமாக தகவல்களை காண்பிக்கும் 3 திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஹோண்டா விமான நிறுவனத்தின் தலைவர் மிச்சிமசா ஃபியூஜினோ கூறுகையில், “விமானம் நிர்மாணிக்கப்பட்டு கொடுக்கப்படும் முதல் நாள் முதல் மிகச்சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஹோண்டாஜெட் விமானத்தில் 2 விமானிகள் உள்பட அதிகபட்சமாக 7 பேர் பயணிக்கலாம் .