மோடி, வரும் திங்கள்கிழமையன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், பா.ஜ.க.,வில் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக நால்வர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அதில், தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, அருண் ஜெட்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நால்வர் குழுவுடன் மோடி, டில்லியில் உள்ள குஜராத் பவனில் நேற்று ஆலோசனை செய்தார்.
அப்போது, மத்திய அமைச்சரவையில் யாரை சேர்ப்பது, யாருக்கு எந்தப் பதவி வழங்குவது என்பது குறித்து மோடி விவாதித்ததாக சொல்லப்படுகிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பே , ராஜ்நாத் சிங்கை அவரது வீட்டில் அகாலி தளத் தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதலும், அவரது மகனும் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதலும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் ராம் மாதவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்று முன்தினம் டில்லிக்கு வந்த மோடி, மத்தியில் அரசு அமைப்பது தொடர்பாகவும், மத்திய அமைச்சர் பதவிகளை கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்குவது குறித்தும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார் மோடி.