கோலாலம்பூர், மே 24 – ஜசெக ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் அம்னோவினரை “செல்லாக்கா” என்று கூறியதைத் தொடர்ந்து ஜசெக கட்சியின் கோலாலம்பூர் அலுவலகத்தின் மீது அம்னோ இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஜசெக அலுவலகத்தின் பெயர் பலகையையும் அம்னோ இளைஞர் பகுதியினர் மற்றும் மலாய் அரசு சார்பற்ற இயக்கங்களைச் சேர்ந்த சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
இச்செயலை கண்டித்து இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மன்னிப்புக் கேட்டதை ஜசெகவின் வியூக இயக்குநர் ஓங் கியான் மிங் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
“ஜசெக அலுவலகத்தை சேதப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்தேன். பெயர் பலகை உடைக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டேன் அதற்காக பணம் கொடுப்பதாகவும் சொன்னேன்” என்று கைரி நேற்று பிற்பகலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் இதனை டுவிட்டரிலும் வெளியிட்டிருந்தார்.
தகவல் கிடைக்கப்பெற்றதை உறுதிபடுத்திய ஜசெக வியூக இயக்குநர் அந்த வகை மன்னிப்பு ஏற்கத்தக்கதல்ல என்றார். அம்னோ இளைஞர்கள் வெளிப்படையாகத்தானே செய்தார்கள். எனவே இதுவும் பகிரங்க மன்னிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, அம்னோ இளைஞர்களை கைரி கட்டுப்படுத்த வேண்டும் என்று மசீச இளைஞர் பகுதி கேட்டுக் கொண்டது.