புதுடில்லி, மே 24 – இந்திய அரசியல் அரங்கில் இவ்வளவு சீக்கிரத்தில் காட்சிகள் மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சில வாரங்களுக்கு முன்னால் பாஜகவின் கூட்டணி வேட்பாளராக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார் வைகோ.
இருப்பினும், அமையவிருக்கும் மோடியின் பாஜக அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வைகோவுக்கு வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் கூறி வந்த வேளையில், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் அவ்வாறே கோடி காட்டியிருந்தார்.
ஆனால், இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில்இலங்கை அதிபர் பங்கேற்பதற்கு தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள்எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், நரேந்திர மோடியின் பதவியேற்பு நடைபெறவிருக்கும் திங்கட்கிழமையன்று, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து புதுடில்லியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும்தெரிவிக்கும் அதே நேரத்தில் ராஜபக்சே புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவை அந்த விழாவில் பங்கேற்க வைப்பது, இந்த விழாவின் உன்னதத்தையே நாசப்படுத்துவதாகவும் வைகோ தனது அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் மன வேதனையையும் எதிர்ப்பையும்பதிவு செய்ய வேண்டும் என்பதால் புதுடில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மே 26ஆம்தேதி காலை பதினோரு மணிக்கு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்றும் – அதே நாளில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலும்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.