சென்னை, மே 25 – நாளை நடைபெறும் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் தனது அதிருப்தியைக் காட்டும் விதமாகவும், தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முறையிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் மாலை 6 மணிக்கு பதவியேற்பு வைபவம் நடைபெறுகின்றது.
இந்த விழாவில் பங்கேற்க வருமாறு முதன் முறையாக தெற்கு ஆசிய நாடுகளின்கூட்டமைப்பான “சார்க்’ உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கைஅதிபர் ராஜபக்சே கலந்துகொள்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லி வருகிறார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், நாளை நடக்கும்மோடி பதவியேற்பு விழாவில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்காமல்புறக்கணிப்பார் என்று் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் யாரையும் தமிழக முதல்வர் அனுப்ப மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
உச்சகட்ட எதிர்ப்பாக தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பதவியேற்பு விழாவை புறக்கணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு புறக்கணித்தால், பாஜகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான இராதாகிருஷ்ணன் மட்டுமே தமிழ் நாட்டிலிருந்து கலந்து கொள்வார்.