Home இந்தியா இந்தியாவின் 14-வது பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்!

இந்தியாவின் 14-வது பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்!

586
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, மே 26 – நாடாளுமன்றப் பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி (63 வயது), இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார்.

அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதையடுத்து மோடியை இன்று மாலை பதவி ஏற்க வரும்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார். இந்த விழாவுக்காக ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள முற்றத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், பூட்டான் பிரதமர் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம், மொரீசியஸ் அதிபர் நவீன் ராம்கூலம் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

cabinet+ap+mosவங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளதால், அவரது சார்பில் சபாநாயகர் ஷிரின் சவுத்திரி கலந்து கொள்கிறார். மோடியின் தாயார் ஹிராபென் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, மாநில முதல்வர்கள் உட்பட பலரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

பிரதமர் பதவி ஏற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வதால், ஜனாதிபதி மாளிகையை சுற்றி நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், துணை ராணுவம், எஸ்.பி.ஜி, தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி), டெல்லி போலீசார் என 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Indian Army marks Army Day in New Delhi, Indiaஜனாதிபதி மாளிகைக்கு மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் 4 அல்லது 5 பேர் கூடி பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமராக பதவி ஏற்பதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம் ராஜ்காட்டில் நரேந்திர மோடி இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் சார்க் தலைவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு ராஷ்டிரபதி பவனில், தமிழ்நாட்டின் செட்டிநாடு சிக்கன் முதல் பஞ்சாபின் தால் மக்கானி வரையில் பல்வேறு மாநில உணவு வகைகள் பரிமாறப்படும்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ், வெளியுறவுச் செயலாளர் அய்சாஸ் சவுத்திரி உட்பட 14 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் வருகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் டெல்லியில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.

இதனால், டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.