புதுடில்லி, மே 27 – நேற்று நடைபெற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த சார்க் எனப்படும் தென் ஆசிய நாடுகளின் தலைவர்களோடு இன்று நரேந்தி மோடி தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தினார்.
இந்தியப் பிரதமராக இன்று காலை 9 மணியளவில் தனது பணிகளைத் தொடக்கிய நரேந்திர மோடி, தனது அலுவலகத்தில் நுழைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் புகைப்படத்தின் முன்னால் பூக்களை வைத்து வணங்கினார்.
அதன் பின்னர், தனது நாற்காலியில் அமர்ந்து கோப்புகளைப் பார்க்கத் தொடங்கினார்.
இன்று அவருக்கு வரிசையாக சந்திப்புகள் காத்திருக்கின்றன.
ராஜபக்சேவுடன் சந்திப்பு
இன்று இந்திய நேரப்படி காலை 10 மணியளவில் புதுடில்லிக்கு வந்திருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் தனது முதல் சந்திப்பை மோடி நடத்தினார்.
மோடியுடன் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதுமே ஒருமனதாக ராஜபக்சேயின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அத்தகைய எதிர்ப்புணர்வை மையக் கருத்தாக வைத்து, மோடி ராஜபக்சேயுடனான பேச்சு வார்த்தையில் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு அலையை மோடி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ராஜபக்சே தமிழர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என மோடி அவரிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவாஸ் ஷெரிப்புடன் சந்திப்பு
புதுடில்லியில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று காலை புதுடில்லியிலுள்ள புகழ் பெற்ற பள்ளிவாசலான ஜமாத் பள்ளிவாசலுக்கு தனது குழுவினரோடு தொழுகைக்காக சென்றார்.
அதன் பின்னர், இந்திய நேரம் பிற்பகல் 12.00 மணியளவில் புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் மாளிகை என்னும் இடத்தில் நரேந்திர மோடியுன் தனிப்பட்ட சந்திப்பை நவாஸ் ஷெரிப் மேற்கொள்வார்.
இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர்களின் பேச்சு வார்த்தைகள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆக, இந்தியப் பிரதமராக இன்று தனி பணியைத் தொடக்கிய முதல் நாளே மோடிக்கு வரிசையாக வெளிநாட்டுத் தலைவர்களின் சந்திப்புகள் அமைந்துவிட்டன.