கோலாலம்பூர், மே 27 – பிரிட்டிஷ் துணைக்கோள் நிறுவனமான இம்மார்சட் மற்றும் மலேசிய விமானப் போக்குவரத்து இலாகா ஆகியவை மாயமான மாஸ் விமானத்தின் பயணப் பாதை குறித்து தாங்கள் கண்டறிந்த முழு தகவல்கள் அடங்கிய அறிக்கையை இன்று வெளியிட்டது.
அத்தகவல்களை வெளியிடுமாறு பயணிகளின் உறவினர்களின் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து தற்போது இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையைப் பெற்ற பயணிகளின் உறவினர்கள் அதை தங்களது பேஸ்புக் பக்கங்களின் பகிர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
எம்.எச் 370 விமானத்திற்கும், துணைக்கோளுக்கும் இடையிலான 7 கைகுலுக்கல்கள் அடங்கிய 14 பக்க தகவல்கள் பகிரப்பட்டுள்ளதாக இன்மார்சட் கடந்த வாரம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 8 -ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட எம்எச்370 விமானம் தென் சீனக் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது 239 பேருடன் ராடார் திசையிலிருந்து மறைந்தது.
80 நாட்களுக்கும் மேலாகியும் இதுவரை விமானத்தைப் பற்றிய எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.