பெய்ஜிங், மே 28 – சீனாவில் இயங்கிவரும் உள்நாட்டு வர்த்தக வங்கிகளில் ‘ஐபிஎம்’ (IBM) நிறுவனத்தின் ‘சர்வர்கள்’ (Servers) -ஐ பயன்படுத்த வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக உள்நாட்டு நிறுவனங்களின் சர்வர்களைப் பயன்படுத்த வேண்டும் என சீன அரசு வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
சமீபத்தில் சீனாவை, அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாகவே அமெரிக்க நிறுவனமான ஐபிஎம்-ன் சர்வர்களைப் பயன்படுத்தக் கூடாது என சீனா நிர்பந்திப்பதாகக் கூறப்படுகின்றது.
மேலும், வர்த்தக நோக்கில் செயல்படும் வங்கிகளில் பயன்படுத்தப்படும் சர்வர்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் உள்ளனவா என்று சீன அரசின் நிதி அமைச்சகம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
எனினும், சீனா இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிடவில்லை என வங்கிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தடை பற்றி ஐபிஎம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அயான் காலே கூறுகையில், “சீனாவில் ஐபிஎம் சர்வர்கள் மீதான தடை பற்றி எவ்வித அறிவிப்புகளும் வரவில்லை. கடந்த 30 வருடங்களாக, ஐபிஎம் சீனாவின் நம்பகமான பங்குதாரராக உள்ளது” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா-சீனா இடையே திரை மறைவில் நடந்து வரும் சைபர் யுத்தம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.