புது டெல்லி, ஜூன் 1 – மத்திய அமைச்சர்கள் குழு, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 21 அமைச்சர்கள் குழுக்களும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களும் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “மத்திய அமைச்சகங்களுக்கும், இலாகாக்களுக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 21 அமைச்சர்கள் குழுவையும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களையும் கலைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் முக்கிய முடிவுகள் துரிதமாக எடுக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். அமைச்சர்கள் குழுக்கள் முன் நிலுவையில் உள்ள விவகாரங்களில் இனி அமைச்சகமே முடிவு எடுக்கும்.
அமைச்சகங்கள் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் கேபினட் செயலரும், பிரதமர் அலுவலகமும் உதவி செய்வார்கள். விரைந்து முடிவுகள் எடுக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.